பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ள நிலையில், சிறுவர், சிறுமிகள் வீட்டருகே விளையாடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வீட்டுக்குள்ளேயே செல்போனில் வீடியோ கேம் விளையாடுவதற்கு பதில் வெளியே விளையாடினால் நல்லது தான் என பெற்றோர்களும் அவர்கள் நலன் கருதி அனுப்பி விடுகின்றனர்.

ஆனால் குழந்தைகள் இவ்வாறு வெளியே விளையாடும் இடங்களில் சிறு புதர்கள் உள்ளதா எனவும், அவர்களுக்கான பாதுகாப்பான சூழல் உள்ளதா எனவும் பெற்றோர் அவசியம் கண்காணிக்க வேண்டும்.

இது கோடை காலம் என்பதால் பாம்புகளின் நடமாட்டம் பொதுவாக அதிகம் இருக்கும் என கருதப்படுகிறது. எனவே குழந்தைகள் வெளியே விளையாடும் இடங்கள் புதர்கள் இல்லாத இடங்களாக இருப்பதை பெற்றோர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

2022ல் கோவையில் 976 பேர் பாம்புக்கடிக்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து உள்ளனர். அதுவே 2023ல் 961 ஆகவும், 2024ல் 772 ஆகவும் இருந்துள்ளது. இந்த ஆண்டில் முதல் 3 மாதங்களில் மட்டும் 179 பேர் சிகிச்சை எடுத்து உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாம்பு கடித்து விட்டால், மக்கள் அவர்களாக கட்டு போட்டுக்கொள்வது, கடித்த இடத்தில் சினிமாவில் காட்டுவது போல மற்றொருவர் வாயை வைத்து உறிஞ்சுவது எல்லாம் நம்மை செய்யாது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சம்பவம் நடந்த உடனே மருத்துவமனைக்கு செல்வது தான் சிறந்த தீர்வு. பாம்பு எந்த நிறத்தில் இருந்தது என்பதை கவனிக்க முடிந்தால் கவனிக்கலாம். இதை தவிர, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதையே முக்கியமான குறிக்கோளாக கொள்ள வேண்டும்.