சங்கனூர் ஓடையில் சரிந்த வீடு: இழப்பீடு வழங்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் கோவை கலெக்டரிடம் மனு
- by David
- Jan 21,2025
கோவை ரத்தினபுரி ஹட்கோ காலணி பகுதி வழியாக செல்லும் சங்கனூர் ஓடையில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு ஓடையை ஒட்டி இருந்த ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் என்பவரின் மாடி வீடும் அருகில் இருந்த ஓட்டு வீடுகளும் சரிந்து விழுந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சுரேஷ் மற்றும் அவரது மனைவி மீனா ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து பேசிய சுரேஷ், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளின் போது வீட்டின் ஒரு பகுதியை இடித்துத் தருமாறு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தாங்களே இடித்து தந்ததாகவும், அதனைத் தொடர்ந்து வீட்டின் பின்புறம் ஓடையை ஒட்டி ஆழமாக தோன்றிய போது வீட்டில் விரிசல் ஏற்படுகிறது என்பதால் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் தாங்கள் கேட்டுக் கொண்டதாக கூறினார்.
இந்த நிலையில் அதனை கேட்காமல் பணிகள் தொடர்ந்து நடைபெற்றதால் தங்களின் வீடு சரிந்து விழுந்ததாக தெரிவித்தார். எனவே தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அடுக்குமாடி குடியிருப்பு எல்லாம் வேண்டாம் தங்களுக்கு தனி இடம் வேண்டும் இடம் கொடுத்தால் நாங்களே வீடு கட்டி கொள்வோம் என கூறினார்.
இது குறித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், அப்பகுதியில் ஏழை மக்கள் வீடு கட்டி வாழ்ந்து வருவதாகவும் தடுப்புச் சுவர் கட்டும் பொழுது மாற்று வீடுகள் தராமலும் மாற்று ஏற்பாடுகள் செய்யாமலும் பாதிப்பு ஏற்படும் வகையில் ஒப்பந்ததாரர் அந்த பணிகளை மேற்கொண்டதாக குற்றம் சாட்டினார்.
எனவே அந்த ஒப்பந்ததாரர் சுரேஷ் க்கு 20 லட்சம் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கி தர வேண்டும் எனவும் அதுவரை அங்கு தூர்வாரும் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பாதிக்கப்பட்ட சுரேஷ் திமுக விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.