கோவையில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹார்ன் பொருத்திய பேருந்துகளுக்கு அபராதம் விதித்த ஆர்.டி.ஓ
- by CC Web Desk
- Apr 17,2025
கோவை மாநகர மற்றும் புறநகர பகுதிகளில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹார்ன் பொருத்தப்பட்டு பேருந்துகளை இயக்கப்பட்டு வருவது பலகாலமாக நடைபெற்று வரும் ஒன்று தான்.
சாலையில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று அதிக ஒலியுடன் பேருந்துகள் அருகே வருவது பிற வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலையும், ஆபத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இன்று காந்திபுரம் பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு நடத்தினர்.
அதில் ஒலியின் அளவை அளக்கக்கூடிய கருவியில் 90 டெசிபல்-க்கு அதிகமாக ஒலி எழுப்பும் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பொருத்தப்பட்ட ஏர் ஹாரனை அகற்றினர். தனியார் பேருந்துகளுடன் அரசு பேருந்துகளும் பாரபட்சம் இன்றி சோதனைக்குட்படுத்தப்பட்டது.
வாகனங்களில் ஏர் ஹார்ன் தொடர்ந்து பயன்படுத்தபட்டு வருவதாக எழுந்த புகார்களின் அடிப்படையிலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்,காவல்துறை அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஏர் ஹாரன் பொருத்திய வாகனங்கள் குறித்து ஆய்வு செய்ததாகவும் ஒலி எழுப்பான்களில் டெசிபல் அதிகமாக இருந்த காரணத்தினால் அபராதம் விதிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
இந்த அபராத தொகையானது ரூ.3000 முதல் ரூ. 10,000 வரை விதிக்கப்பட்டு வருவதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.