கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 21 புது பேருந்துகள் இயக்க விழா இன்று நடைபெற்றது.

இதில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேருந்துகளின் இயக்கத்தைத் துவக்கி வைத்தார். 

இதில் ஈரோடு பாலக்காடு, கோவை பாலக்காடு, கோவை திருச்சூர், கோவை குருவாயூர், கோவை தேனி கம்பம் குமுளி, மேட்டுப்பாளையம் சிவகங்கை, கோவை திருவண்ணாமலை, கோவை சிவகங்கை, கோவை திருச்சி, கோவை சேலம், உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் இந்த பேருந்துகள் இயங்கும்.

இதற்கு அடுத்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில் :-

தர்மபுரி, திருவள்ளூர், மதுரை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் புது அரசு பேருந்துகள் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதேபோல இன்று கோவை அரசு போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட கோவை மண்டலத்தில் 20 புறநகர பேருந்துகள், 1 நகர்ப்புற பேருந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து கோவை அரசு போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட ஊட்டி, திருப்பூர், ஈரோடு போன்ற பகுதிகளிலும் இதுபோன்ற புது பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும், என்றார்.

மேட்டுப்பாளையம் பகுதியில் தொடர்ச்சியாக பேருந்து விபத்துகள் நேர்வதை குறைக்க ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் பதிலளிக்கையில், "மாறிவரும் காலசூழலுக்கு ஏற்ப, தொழில்நுட்ப மாற்றத்துக்கு ஏற்ப பேருந்துகள் வேகமாக இயங்கி வருகிறது. அதேபோல சாலை வசதிகள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டிருப்பதால் பேருந்துகள் பயணிக்கும் வேகம் கூடியுள்ளது. இதை ஒட்டி வரக்கூடிய பிரச்னைகளை எல்லாம் எப்படி சீர் செய்வது என போக்குவரத்து துறை தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது," என்றார்.

சமீபத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் அதிக விபத்துக்கள் நடப்பதாக மக்களிடத்தில் இருந்து புகார் வந்துள்ளது. அதுகுறித்து போக்குவரத்து துறை துணை ஆணையரை விசாரிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அந்த விசாரணை இந்த வாரத்தில் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.