புது தகவல் : விசைத்தறியாளர்களின் கோரிக்கையான கூலி உயர்வு குறித்து ஓரிரு நாட்களில் சுமுகமான தீர்வு வழங்கப்படும் என்ற சூழல் உருவாகி இருப்பதை அடுத்து அவர்கள் நாளை நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டதால் ஓ.இ. மில்களின் வேலை நிறுத்த போராட்டமும் 1.4.25  மாலை வாபஸ் பெறப்பட்டது.

 

 

தங்களுக்கு வழங்கப்படும் ஒப்பந்த கூலியிலிருந்து கூலி உயர்வு வேண்டுமென்று கோரிக்கை விடுத்து கோவை மற்றும் திருப்பூரை சேர்ந்த விசைதறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த வேலைநிறுத்ததால் ஓ.இ. நூற்பாலைகள் நஷ்டம் அடைந்து வருகிறது என்பதால் விசைதறி மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு இடையே சுமூக தீர்வு ஏற்படுத்தி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டி கோவை கலெக்டரிடம் மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பினர் சார்பில் கூட்டமைப்பின் மாநில தலைவர் ஜெயபால் மற்றும் நூற்பாலை  நிர்வாகிகள் சென்ற மாதம் (25.3.25) கோரிக்கை மனு வழங்கினர்.

ஆனால் விசைதறி உற்பத்தி நிறுத்தம் தொடர்வதால் ஓ.இ மில்களில் நூல் தேக்கம், விலைவீழ்ச்சி ,தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு பாதிப்பு போன்ற தாக்கம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் நாளை (2.4.25) உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக விசைதறி உரிமையாளர்கள் அறிவித்து உள்ளதினால் ஓ.இ மில்கள் அன்றைய தினம்  ஒருநாள் கிரே நூல் உற்பத்தி நிறுத்தம் செய்ய தீர்மானித்து உள்ளனர். எனவே உறுப்பினர்களின் தீர்மானத்தின் அடிப்படையில்  மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு சார்பாக ஒரு நாள் உற்பத்தி நிறுத்தம் அறிவித்து உள்ளதாக மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் தலைவர் ஜெயபால் தெரிவித்துள்ளார்.

மேலும் விசைதறியாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடர்ந்தால் ஓ.இ மில்களும் தொடர் உற்பத்தி நிறுத்தம் செய்யவேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவார்கள் என்பதால் கோவை  மாவட்ட பொறுப்பு  அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களும் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அவர்களும் இந்த மாவட்டத்தின் தொழில் நலன் கருதி உதவி செய்திட வேண்டுவதாக அவர் கேட்டுக்கொண்டார்.