உங்களுக்குச் சாதகமான சூழலில் இருந்து வெளியே வந்து, சவால்களை சந்தித்தால்தான், வெற்றிகளை ருசிக்க முடியும் என கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவை மேற்கு மண்டலக் காவல்துறைத் தலைவர் கே.பவானீஸ்வரி பேசினார்.

இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசுவாமி தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் சிவக்குமார், வரவேற்றுப் பேசி பின்னர் கல்லூரியின் சிறப்புகளைப் பட்டியலிட்டார்.  

விழாவில் மேற்கு மண்டலக் காவல்துறைத் தலைவர் கே.பவானீஸ்வரி பேசியதாவது:-

“கல்லூரி வாழ்க்கைத் தொடங்கும் முதல் நாள் அனைவருக்கும் மிக மிக மகிழ்ச்சியான நாள். பெற்றோருக்கும் இது மகிழ்ச்சியான நாள் தான். கல்லூரியில் படித்த ஒவ்வொருவருக்கும் முதல் நாள் மகிழ்ச்சியான நாளாகும். முதல் நாள் கல்லூரிக்கு வந்த மாணவர்களுக்கு யார் நமது பேராசிரியர்? யார் நமது நண்பர்கள் என்ற எண்ணம் மனதில் சிறகடித்துக் கொண்டிருக்கும். நாம் அந்த படிப்பில் சேர்ந்திருக்க வேண்டும். இந்த படிப்பில் சேர்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் பலரது மனதிலும் ஓடிக்கொண்டிருக்கும். அதை தவிர்த்து விடுங்கள். நீங்கள் இப்போது சேர்ந்துள்ள படிப்பு தான் உங்களுக்கானது. இந்த படிப்பு தான் உங்களது வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போகிறது," என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதைத்தொடர்ந்து சென்னை சம்பா பப்ளிசிங் கம்பெனி இயக்குநர் மற்றும் ரோட்டரி கவர்னர் ஆர்.எஸ். மாருதி, எச்.ஆர். எவிடென் டிஜிட்டல் அண்டு கிளவுட் பிசினஸ் துணைத் தலைவர் மற்றும் உலகத் தலைவர்ஆர். ஸ்ரீ ராம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

பின்னர், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு விழாவில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் 2,200-க்கும் மேற்பட்ட புதிதாக இளநிலை பட்டப்படிப்பில் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.