கோவை மாநகர் வழியே அமைந்துள்ள மேட்டுப்பாளையம் சாலை பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களுக்கு தீர்வு காணும் விதத்தில் சாய்பாபா காலனி சந்திப்பு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி தற்போது துவங்கி நடைபெற்றுவருகிறது.

975 மீட்டர் நீளம், 16.61 மீட்டர் அகலமும் கொண்ட இந்த மேம்பாலம் மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள அழகேசன் சாலையில் துவங்கி எரு கம்பெனி அருகே முடிவு அடைகிறது. இந்த மேம்பாலத்தின் கட்டுமான பணிகளை மாநில நெடுஞ்சாலை துறையின் தேசிய நெடுஞ்சாலை பிரிவு முன்னெடுத்துள்ளது.

இந்த திட்டத்திற்காக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ரூ. 75.05 கோடியை நிதியாக வழங்கியுள்ளது. மொத்தம் 23 தூண்கள் அமைக்கப்பட்டு 22 டெக் ஸ்லாபுகள் அதன் மேல் பொறுத்தப்படவுள்ளது.

கட்டுமானப்பணியை செய்து வரும் நிறுவனத்திடம் பணிகளை தாமதமின்றி நடத்திட நெடுஞ்சாலை துறை அறிவுறுத்தியுள்ளது. 2 ஆண்டுகளுக்குள் இந்த மேம்பாலப்பணியை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றவாறு பணியாளர்களை நியமித்திடவும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இந்த மேம்பால கட்டுமானப்பணியால் போக்குவரத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் போக்குவரத்தில் பெருமளவு தாமதமும் ஏற்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.

சிங்கநல்லூரிலும் விரைவில் மேம்பாலம்!

பல மாதமாக முன்னேற்றம் காணாத சிங்காநல்லூர் மேம்பால பணிக்கான நிதியை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ஒதுக்கியுள்ளது. இதற்கு முன்னர் இந்த மேம்பாலத்திற்கான டெண்டர் ரத்தன நிலையில் மறு டெண்டர் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. டெண்டர் இறுதியானதும் பணிகள் துவங்கும்.

Inside Photo credits : Kishore Chandran/Twitter