2023 நவம்பர் மாதம் துவங்கிய கோவை மாநகராட்சியின் ஆம்னி பேருந்து தரம் உயர்த்தல் பணிகள் இப்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஏ பிளஸ் ஆர் ஆர்க்கிடெக்ட்ஸ் எனும் தனியார் நிறுவனம் இந்த பேருந்து நிலையத்தில் தரம் உயர்த்தல் பணிகளை செய்து வருகிறது. துவங்கியதிலிருந்து 6 மாதங்களில் இந்த பணியை நிறைவேற்ற திட்டமிடப்பட்டது. ரூ. 3.5 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் இந்த பணிகளில் கிட்டத்தட்ட 80 % பணிகள் 2024 நவம்பரிலேயேநிறைவேறி விட்டதாக தகவல்கள் உள்ளன. தரமுயர்த்தல் பணிகளின் ஒரு பகுதியான மேற்கூரைகள் பொருத்தும் பணி பெருமளவு தற்போது நிறைவு பெற்றுள்ளது. முன்னதாக பேருந்து நிலையத்தின் இடது, பின்புறம், வலது பகுதிகளில் மேற்கூரைகள் பொருத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மத்திய பகுதியிலும் மேற்கூரைகள் பொருத்தப்பட்டு விட்டன. இங்கு மேற்கூரை பொருத்துவது தான் சிரமமான பணியாக பார்க்கப்பட்டது. 

தற்போது அங்கு பேருந்து நிலையத்தில் ஓரப் பகுதிகளில் பேவர் பிளாக் பொருத்தும் பணிகள், கழிவறைகளில் டைல்ஸ் ஒட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்ததாக இந்த வளாகத்தில் சாலைகள் அமைக்கும் பணி பத்து நாட்களில் துவங்க உள்ளது. முன்னதாக கான்கிரீட் சாலைகள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது வழக்கமான தார் சாலையே அமைக்கப்படும் என தெரிய வருகிறது. 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்த பேருந்து நிலையத்தில் 40 முதல் 50 பேருந்துகளை நிறுத்தக்கூடிய பஸ் பே- க்கள், மழைநீர் வடிகால், பச்சிளம்குழந்தைகளுக்கு தாய்மார்கள் பாலுட்டிட அறை, பயணிகள் காத்திருப்பு அறை, என பல வசதிகளும் இங்கு வருகிறது. 2025 மார்ச் அல்லது ஏப்ரலுக்குள் இந்த பணிகள் எல்லாம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

2006 ஜூலை 1ல் இந்த பேருந்து நிறுத்துமிடம் அப்போதைய ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. அதற்கு அடுத்து 2015 இல் இப்போதைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களால் இங்கு பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை திறந்து வைக்கப்பட்டது. அதற்கு அடுத்த தற்போது மீண்டும் இந்த வளாகம் முழுவதும் புதுப்பிக்கப்படுகிறது.

பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் பயணிகள் மற்றும் டிரைவர்கள் ஓட்டுநர்களுக்கு தேவையான கட்டமைப்புகளை வேகமாக நிறைவேற்றி இந்த வளாகத்தை திறக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் வைக்கின்றனர்.