கோவையில் இருந்து பொங்கலுக்கு பஸ்ல சொந்த ஊருக்கு போறீங்களா? அதிக கட்டணம் வசூல் செய்ற ஆம்னி பஸ் பத்தி புகார் தெரிவிக்க இந்த நம்பர பயன்படுத்துங்க!
- by David
- Jan 09,2025
வரும் 14 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை தொடர் விடுமுறை என்பதால் கோவையில் இருந்து வெளியூர்களுக்கு பலரும் பேருந்துகளில் செல்வது வழக்கம்.
இதுபோன்ற பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு மக்கள் ஆம்னி பேருந்துகளில் செல்லும் போது கூடுதல் கட்டணம் மற்றும் சில குறைபாடுகள், இடையூறுகளை சந்திக்க வாய்ப்புள்ளது.
இதனை தடுக்கும் வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் போக்குவரத்து காவல் துறையினருடன் சிறப்பு கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
இது குறித்து வெளிவந்துள்ள தகவல்கள் பின் வருமாறு:-
இந்த கூட்டத்தில் விழாக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் நிலையான கட்டணம் குறித்து பேசி முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் அதிக கட்டணம் வசூல் செய்யும் ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளின் முறையற்ற கட்டண இயக்கம் தொடர்பாகவும், கூடுதல் கட்டணம் தொடர்பாகவும் புகார் அளிக்க 9384808304 என்ற தொலைபேசி என்னில் நேரடியாக தொடர்பு கொள்ளலாம், அல்லது whatsapp மூலமாகவோ புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் புகார் அளிக்கும் பொதுமக்கள் அவர்களுடைய பெயர், தொலைபேசி எண், பயணம் செய்யும் தேதி, செல்லும் இடம், டிக்கெட்டின் புகைப்படம், கட்டண விவரம், பேருந்து எண் மற்றும் பெயர் ஆகியவற்றுடன் முறையாக புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்கள் ஏதும் வராத வண்ணம் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.