கோவை காந்திபுரம் மத்திய சிறை மைதானத்தில் நடைபெற்றுவரும் செம்மொழி பூங்கா திட்ட பணிகளை கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை) கார்த்திகேயன் IAS நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் இன்று அந்த வளாகத்தில் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு நடத்தினர்.  இந்த திட்டப்பணி முதல் கட்டம் (45 ஏக்கர்), இரண்டாம் கட்டம் (120 ஏக்கர்) என பிரிக்கப்பட்டு, தற்போது முதல்கட்ட பணிகள் நடைபெறுகிறது.

முதல் கட்டத்தில் உள்ள 45 ஏக்கரில் 25 ஏக்கருக்கு 23 வகை தனித்துவமான தோட்டங்கள் அமைகிறது. இந்த பூங்காவில் மொத்தமாக 2.5 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.  இதற்காக சமீபத்தில் சுமார் 60,000 மரக்கன்றுகள் ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து பெறப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் நிறைவடைந்த இடங்களில் செடிகள் நடப்பட்டு வருகிறது.

செம்மொழிப் பூங்காவில் நடப்படவுள்ள செடிகளுக்கு தேவையான நீரானது உக்கடம் கழிவு நீர் சுத்திகரிக்கும் மையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை குழாய் மூலம் சுமார் 6 கிலோமீட்டர் நீளத்திற்கு குழாய் அமைத்து கொண்டு வரும் பணி நடைபெற்று வருகிறது.

மீதம் உள்ள 20 ஏக்கர் நிலத்தில் 1000 சதுர அடியில் உலக தரம் கொண்ட பல்நோக்கு மாநாட்டு மையம், திறந்தவெளி அரங்கம், 300 கார்கள் நிறுத்தும் அளவிற்கான பார்க்கிங் வசதி, செயற்கை நீரூற்று என மற்றும் சில கட்டமைப்புகள் உருவாகின்றன.

தற்போது வரை செம்மொழி பூங்காவில் நுழைவு சீட்டு வழங்கும் கட்டிடம் 65%, திறந்தவெளி அரங்கம்  80%, சுற்றுச்சுவர் 95%, 3 கழிப்பிடம் 80%, நிலத்தடி நீர்த்தேக்கத்தொட்டி 100% , தோட்டக்காரர்கள் அறை 60%, உணவகம் 60%, நுழைவு வாயில் 80%, சில்லறை விற்பனை நிலையம் 60% என்ற அளவில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

செம்மொழி பூங்கா வளாகத்தில் நிலத்தடி நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி, மழைநீர் வடிகால், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு குழாய்கள் மற்றும் கூடுதல் மேம்பாட்டு பணிகள் 30 % அளவில் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆடியோ மற்றும் வீடியோ அமைப்புகள், தளவாடங்கள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டு, நடவடிக்கையில் உள்ளது. மேலும் தற்பொழுது வரை 73% பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாநாட்டு மையத்தின் பரப்பளவு 4830 சதுர மீட்டர் ஆகும். இதில் ஆயிரம் நபர்கள் ஒரே நேரத்தில் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்களுக்கான தனி வழி, உணவு அருந்தும் கூடம், கூட்ட அரங்கம் விருந்தினர்கள் அறை மற்றும் பல்வேறு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

தரை தள வாகன நிறுத்துமிடமானது 17007.91 சதுர மீட்டர் பரப்பளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 380 எண்ணிக்கையிலான நான்கு சக்கர வாகனங்களும், 10 எண்ணிக்கையிலான பேருந்துகளும் நிறுத்துவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.