கோவை மாநகரில் உருவாகும் கழிவு நீரெல்லாம் எங்கே போகிறது, என்ன ஆகிறது என எப்போதாவது யோசித்து இருக்கின்றீர்களா?
நமது மாநகராட்சியில் உருவாகும் கழிவு நீரை சுத்திகரிக்க மாநகரின் பல்வேறு இடங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளது. இந்த ஆலைகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, அதன் பின்னர் நீர் நிலைகளில் செலுத்தப்படும்.
தற்போது கோவை மாநகராட்சி உக்கடம், நஞ்சுண்டாபுரம் மற்றும் ஒண்டிப்புதூர் ஆகிய 3 இடங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகளை இயக்கி வருகிறது. குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் உருவாகும் கழிவுநீரை சுத்திகரிக்க ஒரு ஆலை உருவாகிறது. மேலும் வடவள்ளி, வீரக்கேரளம் பகுதிகள், கவுண்டம்பாளையம், துடியலூர் பகுதிகள் மற்றும் சரவணம்பட்டி பகுதி ஆகிய இடங்களில் புதிதாக சுத்திகரிப்பு ஆலைகள் கட்ட திட்டம் உள்ளது.
உக்கடம் பகுதியில் உள்ள கோவை மாநகராட்சி கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையில் ரூ.245 கோடி மதிப்பில் ஆர்.ஓ. தொழில்நுட்பம் (Reverse Osmosis) கொண்ட ஆலை ஒன்றை அரசு மற்றும் தனியார் கூட்டுமுயற்சியில் உருவாக்க தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து வரும் நீரானது ஆர்.ஓ. தொழில்நுட்பம் (Reverse Osmosis) கொண்ட ஆலை மூலம் வரும் நீரைக்கொண்டு மேலும் சுத்திகரிப்பு செய்யப்படும். இதன் பின்னர் அது நீர் நிலைகள் மூலம் வெளியிடப்படும்.
மேலும், இவ்வாறு சுத்திகரிப்பு செய்யப்பட்டுள்ள நீரானது, தொழிற்சாலைகளில் வெவ்வேறு பணிகளுக்கு பயன்படுத்தக் கூடிய தன்மையில் இருக்கும் என்பதால், தொழில் நிறுவனங்களும் இதை வாங்கிக்கொள்ள திட்டங்கள் உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்கடம் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையில் ஆர்.எஸ். புரம், டவுன் ஹால் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இதில் தினமும் 40 மில்லியன் லிட்டர் அளவுக்கு கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இதில் 70 மில்லியன் லிட்டர் அளவுக்கு கழிவு நீரை சுத்திகரிக்க முடியும்.
இந்நிலையில், ஆர்.ஓ. தொழில்நுட்பம் (Reverse Osmosis) கொண்ட ஆலை ஒன்று இங்கு அமைவது இதற்கு மேலும் வலிமை சேர்க்கும். இந்த வசதி கோவை மாநகரில் உள்ள எல்லா மாநகராட்சி சுத்திகரிப்பு ஆலைகளிலும் கொண்டவர திட்டமுள்ளது. இன்று இந்த அலையில் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு நடத்தினார்.
அண்மையில் இந்த ஆலையில் இருந்து காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் செம்மொழி பூங்காவில் உருவாகவுள்ள மரம், செடி, தோட்டங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீர் எடுத்துவர 6 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய்கள் பாதிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியானது.
மேலும் 9 கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகள் அமைகிறது!
மேற்கு தொடர்ச்சி பகுதியில் ஆரம்பிக்கும் நொய்யல் நதி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்கள் வழியே செல்லும். இந்த நதி செல்லும் வழியே உள்ள கோவை மாநகராட்சி பகுதிகள், டவுன் பஞ்சாயத்துகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் இருந்து வரும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் இந்த நதியில் கலக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இதை தடுக்க கோவை மாவட்டத்தில் இந்த நதி செல்லும் வழியே உள்ள 9 டவுன் பஞ்சாயத்துகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகள் கட்ட அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனவே விரைவில் இருகூர், சூலூர், கண்ணாம்பாளையம், வெள்ளலூர், பேரூர், வீரபாண்டி, ஆலந்துறை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட இடங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகள் கட்டப்படும். இதனால் நொய்யலில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் கலப்பது தடுக்கப்படும்.
சிறுதுளி செய்யும் பெரும் உதவி!
கோவையில் நீர் மேலாண்மை பணிகளை சிறப்பாக முன்னெடுத்துவரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான சிறுதுளி, கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலத்துக்குட்பட்ட வெள்ளக்கிணறு தெற்கு சோலை குட்டை பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை 'நமக்கு நாமே' திட்டத்தில் ரூ.4.8 கோடி மதிப்பீட்டில் கட்ட உள்ளது.
3.57 ஏக்கர் அளவு கொண்ட இந்த குட்டையில் தினமும் 8 லட்சம் லிட்டர் கழிவு நீர் வந்து சேருகிறது. இந்த நீர் மிகவும் மோசமாக உள்ளது. இந்நிலையில், சிறுதுளி கொண்டுவரவுள்ள இந்த கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையில், தினமும் 1 மில்லியன் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய முடியும். இதில் சுத்திகரிப்பு செய்யப்படும் நீர் மீண்டும் குட்டையில் விடப்படும். 50% நீரானது விருப்பமுள்ள தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள கட்டணம் அடிப்படையில் வழங்கப்படும்.
கோவையில் உருவாகும் லட்சக்கணக்கான லிட்டர் கழிவு நீரை சுத்திகரிக்க பல இடங்களில் பல கோடி மதிப்பில் புது கட்டமைப்புகள் உருவாகிறது!
- by David
- Nov 18,2024