வால்பாறைக்கு 2 சக்கர வாகனங்களில் செல்ல தற்காலிக கட்டுப்பாடு விதித்தது வனத்துறை! எப்போது வரை?
- by David
- Feb 09,2025
கடந்த சில நாட்களுக்கு முன்பு வால்பாறைக்கு சுற்றுலா வந்த ஜெர்மனி நாட்டை சேர்ந்த 77 வயது ஆண் ஒருவர், பைக்கில் சென்ற போது யானை தாக்கியதில் உயிரிழந்தார்.
மலைப்பாதையில் காட்டு யானை நடமாட்டம் தென்பட்டதால் அந்தப் பகுதியின் இருபுறமும் வாகனங்கள் செல்லாமல் நின்று கொண்டிருந்தன. அப்போது மைக்கேல் ஜெர்சென் என்கிற அந்த ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர் சக வாகன ஓட்டிகள் எச்சரிக்கை விடுத்ததை பொருட்படுத்தாமல் யானை நிற்கும் பாதையை கடந்து விடலாம் என்று வாகனத்தில் வேகமாக சென்ற போது யானை தாக்கியதில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்போது வால்பாறை மலைப்பாதையில் யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது தெரிய வந்ததை அடுத்து, வால்பாறைக்கு மோட்டார் பைக்கில் மாலை 6 மணிக்கு மேல் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக கட்டுப்பாட்டை வனத்துறை விதித்துள்ளது.
அதன்படி வால்பாறை மலைப்பாதையில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை வாகனங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இரண்டு சக்கர வாகனங்களில் மேற்குறிப்பிட்ட நேரத்தில் செல்ல அனுமதி கிடையாது.
வால்பாறையை சேர்ந்தவர்கள் கார், பஸ்களில் செல்வதற்கு எந்த வித தடையும் இல்லை.