கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு 14 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் தமிழக எல்லையான வாளையார் பகுதியில் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தின் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பஞ்சாயத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த நிகழ்வு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது, மலப்புரத்தில் சுகாதாரத் துறை கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது, அங்கு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் முகமூடி அணிய அறிவுறுத்தப்பட்டனர். சிறுவன் வசித்த கிராமமான பாண்டிக்காடு பஞ்சாயத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் லாக்டவுன்கள் நடைமுறையில் உள்ளன.

இதற்கிடையில், மேலும் 4 பேருக்கு நிபா அறிகுறி இருப்பதாகவும், அவர்களில் ஒருவர் உயிர் காக்கும் கருவிகள் ஆதரவில் சிகிச்சையில் இருக்கிறார் கூறினார். அவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. சிறுவனின் தொடர்பு பட்டியலில் இருந்த சுமார் 240 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

தொடர்ந்து, “கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், திருவனந்தபுரத்தில் உள்ள வைராலஜி ஆய்வகத்திலும் மாதிரிகளை பரிசோதிக்கும் வசதி இருந்தாலும், என்ஐவி-புனேயில் இருந்து ஒரு மொபைல் லேப் பரிசோதனைக்காக மலப்புரத்திற்கு கொண்டு வரப்படும். அதிக ஆபத்துள்ள பிரிவில் உள்ள அனைவரின் மாதிரிகளும் பரிசோதிக்கப்படும்.

கேரளாவில் 14 வயது சிறுவன் நிபா வைரஸ் தாக்குதலுக்கு பலியான சம்பவம் தமிழக எல்லை பகுதிகளிலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.  இதையடுத்து, தமிழக சுகாதாரத்துறை உஷார் நிலையில் செயல்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தையொட்டி இருக்கும்  தமிழக கேரளா எல்லை பகுதிகளில் சுகாதாரத் துறையினர் இன்று காலை முதல் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

வாளையார் சோதனை சாவடியில் முழு கவச உடை அணிந்த தமிழக சுகாதாரத் துறை ஊழியர்கள், பேருந்து மற்றும் கார் , வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் ஏதேனும் இருக்கிறதா என ஆய்வு மேற்கொண்ட பின்னரே அனுமதிக்கின்றனர்.

கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்திற்குள் வரும் 13 வழித்தடங்களிலும் சுகாதார துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகளுடன் வருபவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில்  ஐந்தாவது முறையாக நிபா வைரஸ் காய்ச்சலில் தாக்கம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.