கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அண்மையில் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, கோவை- கேரளா எல்லையில் உள்ள வாளையாறு, வேலந்தா வளம், மாங்கரை, மீனாட்சிபுரம் உள்ளிட்ட 11 சோதனை சாவடிகளில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், நர்சுகள் உள்ளிட்டோர் முழு கவச உடை அணிந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அவர்கள் கேரளாவில் இருந்து கோவை வரும் பஸ், ஆட்டோ, கார் உள்பட அனைத்து வாகனங்களையும் தீவிரமாக கண்காணிக்கிறார்கள். அந்த வாகனங்களில் வரும் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு அதன்பிறகே அவர்கள் கோவை மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதுபோல் கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களின் உள்ளேயும், டயர்களிலும் சானிடைசர் தெளிக்கப்பட்ட பிறகே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,  நிபா வைரஸ் எதிரொலியால் கோவை மண்டலத்தில் உள்ள கல்லூரிகளுக்கு கல்வித்துறை  சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கல்லூரி மாணவ, மாணவிகளை கேரளாவுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.