கோவை மாநகரில் உருவாகும் கோழி கழிவுகளை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் மேலாண்மை செய்ய அப்பணிகளை நடத்திவந்த ஒரு தனியார் நிறுவனத்திற்க்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் மார்ச் 30 முதல் தடை விதித்தாக தகவல்கள் உள்ளன.

இந்த நிலையில், இதற்கு பின்னர் சேகரமாகும் கோழி கழிவுகள் என்ன ஆகிறது என்ற விவரம் தெரியவராத சூழல் நிலவுவதால் வெள்ளலூர் குப்பை கிடங்கில் புதைக்கப்படுகிறதா என சுற்றுசூழல் அதிகாரிகள் ஆய்வு நடத்தவேண்டும் என வெள்ளலூர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள மக்கள் தரப்பில் 'குறிச்சி - வெள்ளலூர் மாசு தடுப்பு கூட்டுக்குழு'வினர் சுற்றுசூழல் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கோவை தெற்கு மண்டலத்தின் மாவட்ட சுற்றுசூழல் பொறியாளருக்கு குறிச்சி - வெள்ளலூர் மாசு தடுப்பு கூட்டுக்குழுவின் தரப்பில் செயலர் மோகன் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

கோவை மாநகராட்சியில் தினசரி சேகரிக்கப்படும் கோழிக்கழிவுகள் அனைத்தும் வெள்ளலூர் குப்பை கிடங்கில் தனியார் நிறுவனமான பைரவா ஏஜெண்சி கடந்த சில வருடங்களாக மேலாண்மை செய்து வந்தபோதிலும் மேலாண்மை செய்யும்போது அங்கிருந்து வரும் துர்நாற்றம் அருகில் வசிக்கும் மக்களுக்கு தாங்க முடியாத அளவிற்கு துன்பத்தை தந்தது, மேலும் எங்களது தொடர் புகாரின் அடிப்படையில் கோவை மாநகராட்சி நிர்வாகம் அந்த நிறுவனத்திற்கு வெள்ளலூர் குப்பை கிடங்கில் கோழி கழிவுகளை மேலாண்மை செய்ய அண்மையில் தடை விதித்துள்ளது.

அதன் பிறகு கடந்த தினங்களில் தினசரி சேகரகிப்படும் கோழிக்கழிவுகள் வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் குழிதோண்டி புதைப்பது அல்லது வேறு எங்கு கொண்டு போகிறார்கள் என்ற விபரம் தெரியவில்லை.

அப்படி அவர்கள் பூமிக்கடியில் கோழிக்கழிவுகளை கொட்டினால் நிலத்தடி நீர் மாசுபடும். ஆகவே சுற்றுசூழல் மாசுபடுவதை தவிர்க்க தங்களது வாரியமும் எங்களது அமைப்பும் சேர்ந்து கூட்டாக ஆய்வு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.