கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உலக தரம் கொண்ட கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு அதற்கான ஆரம்பநிலை திட்டமிடல் பணிகளை முன்னெடுத்துள்ளது.

தற்போது இதுகுறித்து வெளியாகி உள்ள தகவல் படி, இந்த வார இறுதிக்குள் அல்லது அடுத்த வாரத்தில் இந்த திட்டத்திற்கான தொழில்நுட்ப ஆலோசனை வழங்க ஒரு நிறுவனத்தை ஆலோசகராக அரசு நியமிக்க உள்ளது. இந்த நிறுவனம் இந்த மைதானத்திற்கான வடிவமைப்பு மற்றும்  விரிவான திட்ட அறிக்கை (DPR) ஆகிய இரண்டையும் தயாரிக்கும்.

குறைந்தது 1 மாதம், அதிகபட்சம் 50 நாட்களில் இந்த பணியை அந்த நிறுவனம் முடிக்கும் எனவும், 2024 இறுதிக்குள் மைதானம் கட்டுவதற்கான திட்டம் அரசு வசம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் உள்ளது. இந்த மைதான திட்டத்திற்கான மதிப்பு அந்த விரிவான திட்ட அறிக்கையை வைத்து முடிவு செய்யப்படும். 

கடந்த சில தினங்களுக்கு முன்னர், கோவை RS புரம் பகுதியில் சர்வதேச தரத்தில் உருவாகவுள்ள ஹாக்கி மைதானத்திற்கான இடத்தில் தமிழக மின்சாரத்துறை அமைச்சரும், கோவையின் வளர்ச்சிக்காக தமிழக முதலமைச்சரால் நியமனம் செய்யப்பட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்.  

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த ஹாக்கி மைதானத்தின் பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளது. 2025 ஏப்ரல் மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு, மைதானம் விளையாட்டு போட்டிகள் நடத்திட பயணப்பாட்டுக்கு கொண்டுவர திட்டமுள்ளது என்றார். 

ஹாக்கி மைதானத்துடன் இப்போது கிரிக்கெட் மைதானம் குறித்த அப்டேட்டும் வெளிவந்துள்ளது கோவையில் உள்ள விளையாட்டு ஆர்வலர்கள், வீரர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.