கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இன்று இராமநாதபுரம் சிக்னல், சிங்காநல்லூர் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

அங்கு குடிநீர் பிரதான குழாய் பதிக்கும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, சாலை ஓரங்களில் படிந்துள்ள மண்களை  அகற்றி, குடிநீர் திட்டப் பணிகளை உடனடியாக செய்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டு அங்கு பணிகள் நடைபெற்ற பின்னர், அந்த குழிகள் மூடப்பட்டு அதன் பின்னர் அங்கு புதிதாக தார் சாலைகள் அமைக்கப்படுகிறது.சில இடங்களில் குழிகள் அப்படியே மணலை கொட்டி மூடப்படுகிறது, சில இடங்களில் சிமெண்ட் கொண்டு சாலை சீரமைக்கப்படுகிறது. ஆனால் அதன் பின்னர் அங்கு மீண்டும் இதே பணிகளுக்காக அந்த சாலையில் குழிகள் தோண்டப்பட்டு, மணலை கொண்டு மூடப்படுகிறது. 

உதாரணத்திற்கு பீளமேடு பாரதி காலனி பகுதியில் 24 x 7 திட்டப்பணிகளுக்காக பல்வேறு இடங்களில் குழாய் பதிக்க பணிகள் நடைபெற்றது.

அதன் பின்னர் பல மாதங்கள் கழித்து கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் இங்கு தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த இடத்தில் மீண்டும் 24x7 குடிநீர் திட்டப்பணிகளுக்காக அந்த சாலையை மே மாதமே தோண்டி உள்ளனர்.

இதுபோன்ற சம்பவங்கள் மாநகரின் பல இடங்களில் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சாலைகள் அமைத்த பின்னர் மீண்டும் அதை தோண்டுவதற்கு பதிலாக மொத்தமாக முடித்த பின்னர் சாலைகள் அமைத்தால் மக்கள் வரிப்பணம் தேவையில்லாமல் வீணாகாது.

கோவை மாநகராட்சி வார்டுகளுக்குள் எந்த ஒரு பொது பணி நடைபெற்றாலும் அது கோவை மாநகராட்சியால் தான் ஒப்பந்ததாரர்கள் மூலம் நடத்தப்படும்.  அப்படி இருக்க, ஒரு பகுதியில் உள்ள சாலையை ஒரு முறை உடைத்து அங்கு பணிகள் மேற்கொள்ள போகின்றார்கள் என்றால், அங்கு மீண்டும் சாலை அமைப்பதற்கு முன்னர் வேறு என்ன பணிகள் உள்ளதோ அதை மாநகராட்சி துறையினர்கள் கலந்து பேசி, அந்த பணிகளை முடித்தபின்னர் தார் சாலை அமைக்கலாமே என கேள்வி எழுப்புகின்றனர்.  

இந்த 24x 7 குடிநீர் திட்டப்பணிகள் கோவை மாநகராட்சியின் மேற்கு, தெற்கு, கிழக்கு மண்டல பகுதிகளில் 90% நிறைவடைந்து உள்ளதாகவும், வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் 60% வரை நிறைவடைந்து உள்ளதாகவும்; மொத்தமாக கோவையில் 83.5% பணிகள் நிறைவடைந்து உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஜனவரி 2025ல் மொத்தமாக நிறைவடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.

எனவே ஒரு பகுதியில் இந்த திட்டப்பணிகள் முற்றிலும் முடிவடைந்த பின்னர் அதை உறுதி செய்த பின்னர் சாலைகள் அமைக்கலாம். பல இடங்களில் குழிகள் தற்காலிகமாக மூடப்படுவதால் வாகனவோடிகளுக்கு சிரமம் ஏற்படும் சூழல் நிலவிவருவது குறிப்பிடத்தக்கது.