வருவாய்த்துறையால் வழங்கப்படும் பட்டா மாறுதல், ஜாதி, வருவாய் உள்ளிட்ட, 26 வகையான சான்றிதழ்கள் அதிகபட்சம், 15 நாட்களில் தாலுகா அலுவலகங்கள் வாயிலாக, ஆன்லைன் முறையில் வழங்க கோவை மாவட்ட நிர்வாகம் வசதி ஏற்படுத்தி தந்திருக்கிறது.

அந்தவகையில், பட்டா மாறுதல், பெயர் மாற்ற சான்றிதழ் 15 நாட்களிலும், ரேஷன் கார்டு 30 நாட்களிலும், வாரிசுச் சான்றிதழ் 15 நாட்களிலும், உட்பிரிவு செய்தல் 30 நாட்களிலும், இறப்புச் சான்றிதழ் 7 நாட்களிலும், வருவாய் சான்றிதழ்15 நாட்களிலும், ஜாதிச்சான்றிதழ் 7 நாட்களிலும் மின் இணைப்பு 14 நாட்களிலும், குடிநீர் இணைப்பு சான்றிதழ் 7 நாட்களிலும் கிடைக்கும். 

இது குறித்து, கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா கூறியுள்ளதாவது :-

தமிழக அரசின் நில வருவாய்த்துறை கமிஷனரின் உத்தரவுப்படி, வருவாய்த்துறை சார்ந்த பணிகளை வேகமாக முடித்து, மக்களுக்கு அதன் பலன் கிடைக்கச் செய்ய வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்ற, கோவை மாவட்டத்திலுள்ள, 11 தாலுகா தாசில்தார்கள் மற்றும் அனைத்து வருவாய்த்துறை அலுவலர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வருவாய்த்துறை சார்ந்த 26 சான்றிதழ்கள், ஆன்லைனில் அப்லோடு செய்யப்பட்ட நாளிலிருந்து, 15 நாட்களுக்குள் விசாரணை மேற்கொண்டு, சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யவேண்டும்.

ஒருவேளை சான்றிதழ் இணைக்காவிட்டால், அதற்கான காரணங்களையும், தேவையான ஆவணங்களையும் இணைக்க வலியுறுத்த வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தியிருந்ததால், இப்போது சான்றிதழ்கள் விரைந்து வழங்கப்பட்டு வருகின்றன என்றார் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா.

ஆன்லைனில் சான்றிதழ் வழங்கப்பட்டாலும், விசாரணை செய்வதற்காக போனில் வரவழைத்து லஞ்சம் கேட்கும் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆதாரப்பூர்வமான புகார்கள் மீது, நிர்வாக ரீதியான விசாரணை மேற்கொண்டு துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போலியான புகார்கள் கொடுப்போர் மீதும், நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்துள்ளார் கோவை மாவட்ட வருவாய் அலுவலர்.