கோவை மாநகராட்சியில் இன்று மாமன்ற சாதாரணக் கூட்டம், துணை மேயர் தலைமையில் விக்டோரியா ஹால் கூட்ட அரங்கத்தில் இன்று நடைபெற்றது.

இதில் கோவை மாநகராட்சியின் தேவைகள் குறித்து கோரிக்கைகள் மாமன்றத்தின் முன்னர் வைக்கப்பட்டன. இதில் நொய்யல் சீரமைப்பு பற்றிய கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் முக்கிய நீர் ஆதாரமான நொய்யல் ஆறு மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உருவாகி காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த ஆற்றின் மொத்த நீளம் 158.35 கி.மீ. ஆகும்.

இதில் 18.56 கி.மீ. நீளத்திற்கு நொய்யல் ஆறு கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குள் கடந்து செல்கிறது. இவ்வாறு செல்லும் நொய்யல் ஆற்றில் பல இடங்களில் கழிவு நீர் கலந்து மாசுபடுவதுடன் குப்பைகளும் கொட்டப்பட்டுள்ளது. மேலும், நொய்யல் ஆற்றில் இருபுறமும் உள்ள கரைகளில் ஆக்கிரமிப்புகளும் உள்ளன.  

எனவே, நொய்யல் ஆற்றினை மாசுபடுவதிலிருந்து தடுக்கவும். ஆக்கிரமிப்புகளை அகற்றவும் ஆற்றின் இருகரைகளிலும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற கட்டமைப்புகள், பூங்காக்கள் ஏற்படுத்த உரிய விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து சமர்ப்பிக்குமாறு நகராட்சி நிர்வாக இயக்குநர் கடந்த மே 28ஆம் தேதி கடிதம் மூலம் அறிவுறுத்தி இருந்தார்.

அதன்படி ஆறு சீரமைப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளை ரூ.200 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் பணியாக ஆற்றின் இருபுறமும் சர்வே செய்யும் பணிகள் துவங்கப்பட்டு, இருபுறமும் சர்வே கல் நடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றின் நீரினை மாசுப்படுத்தும் இடங்களில் கழிவநீர் மாதிரி எடுத்து பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே, நொய்யல் ஆற்றினை நில அளவீடு செய்து ஆறு சீரமைப்பு மற்றும் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கையினை (Detailed Project Report - DPR) தேவை.

இதை தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்தின் திட்ட உருவாக்க மானிய நிதியிலிருந்து ஆலோசனைத் தொகையினை முழு மானியமாக செலவிட்டு DPR அறிக்கையினை தனியார் தொழில்நுட்ப நிறுவனம் மூலம் தயார் செய்து தருமாறு தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்தினை கேட்டுக் கொள்ளப்பட்டது.