கோவை வணிகர்கள் கவனத்திற்கு : மே 15ம் தேதிக்குள் தமிழில் பெயர்ப் பலகை வைக்கவேண்டும் - கலெக்டர் அறிவிப்பு
- by CC Web Desk
- Apr 01,2025
கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளிலும் வரும் மே 15க்குள் தமிழில் பெயர்ப் பலகை அமைக்க வேண்டும் என்றும், இல்லையேல் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது :-
தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947 மற்றும் விதிகள் 1948ல் விதி 15ன் படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும்.
இதே போல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உணவு நிறுவனங்களும், தொழிற்சாலைகளிலும் மேற்கண்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தமிழில் பெயர்ப் பலகை வைக்கப்பட வேண்டும்.
மேலும் இந்த பெயர்ப் பலகையானது தமிழில் முதன்மையாகவும். பின்னர் ஆங்கிலத்திலும் அதன் பின்னர் அவரவர் விரும்பும் மொழிகள் என 5:3:2 என்ற விகிதாசாரப்படி அமைக்கப்பட வேண்டும்.
கோவையில் மாவட்ட ஆட்சித் தலைமையில், அனைத்து கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் - அனைத்து வகையான தொழிற்சாலைகள் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் தமிழில் பெயர்ப் பலகை வைப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தமிழ் வளர்ச்சித் துறை, உள்ளாட்சித் துறை, வணிகர் சங்கங்கள், உணவு நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் கூட்டமைப்புகள் உறுப்பினராக உள்ளனர்.
இக்குழுவினர் ஆய்வு செய்து வரும் மே மாதம் 15ம் தேதிக்குள் தமிழில் பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளதை 100 சதவீதம் உறுதிப்படுத்த உள்ளனர். இந்த கால அவகாசத்திற்குள் தமிழ் பெயர்ப் பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும்.
எனவே அனைத்து கடைகள், வணிக, உணவு நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகள் தங்கள் குழு உறுப்பினர்களுக்கு இந்த தகவலைத் தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தமிழ் பெயர்ப் பலகை 100 சதவீதம் அமைக்கப்படுவதை உறுதி செய்வதுடன் அபராதத்தைத் தவிர்க்கவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.