கோவை பள்ளி கல்வித்துறை சார்பில் கட்டப்படவுள்ள 'பெரியார்' நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கோவைக்கு பல திட்டங்களை அறிவித்தார்.

அதன் விவரம் பின்வருமாறு:-

உலக அளவில் தங்க நகைகள் தயாரிப்பில் முக்கிய மையமாக விளங்கும் கோவைக்கு, குறிச்சியில் உள்ள தொழிற்பேட்டையில், 126 கோடி ரூபாய் செலவில், தொழில் வளாகம் கட்டப்படும். NABL அங்கீகாரம் பெற்ற ஆய்வகம் உள்ளிட்ட எல்லா வசதிகளையும் கொண்ட இந்த வளாகத்தில் இரண்டாயிரம் பேருக்கு நேரடியாகவும், 1500 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தற்போதுள்ள டைடல் பார்க் அருகிலேயே, எல்காட் பகுதியில் 17.17 ஏக்கர் பரப்பளவில் மேலும் ஒரு பெரும் தகவல் தொழில்நுட்ப வளாகம் அமைக்கப்படும். கோவையில், தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து இந்த பெருந்திட்டம் செயல்படுத்தப்படும். சுமார் 36,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய வகையில், 3 மில்லியன் சதுரஅடி பரப்பளவில் இந்த தகவல் தொழில்நுட்ப வளாகம் அமையும்.

அவினாசி சாலையில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலம் சின்னியம்பாளையம் முதல் நீலாம்பூர் வரை மேலும் 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுமார் 600 கோடி ரூபாய் செலவில் நீட்டிக்கப்படும்.

தொண்டாமுத்தூர் பகுதியில் யானைகள் நடமாட்டத்தால் நிகழும் மனித விலங்கு மோதல் சம்பவங்களைத் தடுக்கவும், பயிர்சேதங்களையும்,உயிரிழப்புகளையும் தவிர்க்கவும் சுமார் 7 கோடி ரூபாய் செலவில் 10 கிலோ மீட்டர் நீளத்திற்கு யானை புகாத நவீன பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படும்.

கோட்டூர், வேட்டைக்காரன்புதூர், உடையகுளம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் 38 கிராமங்களுக்கு பயனளிக்கக்கூடிய கூட்டுக் குடிநீர் திட்டம் 26 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு மற்றும் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியங்களில் இருக்கும் 295 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கக்கூடிய கூட்டுக் குடிநீர் திட்டம் 51 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

கோயம்புத்தூர் மாநகராட்சியில், பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் உள்ள சாலைகள், பாதாளச் சாக்கடைப் பணிகளால் பாதிக்கப்பட்டுள்ள சாலைகள், அதிக குடியிருப்புகள் இருக்கக்கூடிய பகுதிகளில் உள்ள மண்சாலைகள், இவற்றையெல்லாம் தரமான தார்சாலைகளாக மேம்படுத்திட, 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.