தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கோடை மழை வெளுத்துவங்கியது. நேற்று கோவை மற்றும் நீலகிரி பகுதியில் கனமழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஹில்குரோவ் ரயில் நிலையம் அருகே மலை ரயில் பாதையில் ராட்சத பாறை உருண்டு விழுந்தது. இதனால் தண்டவாளம் சேதமடைந்தது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரயில் இன்று காலை வழக்கம் போல 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு  நூற்றுக்கும் அதிகமான பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.

இந்நிலையில் ஹில்குரோவ் அருகே ரயில் பாதையில் பாறைகள் இருப்பது தெரியவந்ததை அடுத்து ரயில் கல்லாறு ரயில்வே ஸ்டேஷன் அருகிலேயே நிறுத்தப்பட்டு, மீண்டும் மேட்டுப்பாளையம் நோக்கி திரும்பி வந்தது.

ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்த 184 பயணிகளுக்கும் பயண கட்டணம் திருப்பி தரப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.