கோவை மாவட்டத்தில் MSME எனும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்சார கட்டண உயர்வால் நசிந்து வருகின்றன. இங்குள்ள MSME நிறுவனங்கள் 30% க்கும் மேல் மூடப்படும் நிலைமை ஏற்பட்ட மின் கட்டண உயர்வு காரணமாக உள்ளது என கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
வேறு ஒரு நிகழ்வு குறித்து தனது விளக்கத்தை வழங்க நேற்று வானதி பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பிலும், இன்று முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து தெரிவித்த கருத்து ஒன்றுக்கு பதில் கருத்து தெரிவிக்க வானதி வெளியிட்ட செய்தி குறிப்பிலும் கோவையில் உள்ள MSME நிறுவனங்கள் மின் கட்டணம், மூலப்பொருள் விலை உயர்வு போன்றவையால் எவ்வாறு பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதை அவர் எடுத்துரைத்துள்ளார்.
துறை ரீதியாக அமர்ந்து பேசுங்க!
தொழில்துறைக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்வு போன்ற பிரச்சனைகள் குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஏற்படும் போது அங்குள்ள மாநில அரசுகள் தொழில்துறைக்கு உள்ள பாரத்தை குறைக்க முயற்சி எடுக்கின்றன. MSME தொழில்துறை பிரதிநிதிகளை அழைத்து பேசி, அவர்கள் குறைகளை கேட்டு, மத்திய அரசிடம் அழைத்து சென்று அமர்ந்து தீர்வு தேட பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதுபோன்று ஒரு முயற்சியை தமிழ் நாடு அரசு செய்துள்ளதா? என வானதி நேற்று கேள்வி எழுப்பினார்.
மாநில அரசின் தவறான கொள்கையால் இந்தப் பகுதியில் இருக்கும் சிறு குறு தொழில் நிறுவனங்கள் நசிந்து கொண்டிருக்கின்றன என அவர் குற்றம் சாட்டினார்.
கோவையில் மோட்டார் பம்ப், வெட் கிரைண்டர் தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் உள்பட பல துறை சார்ந்த நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களை தனி தனியாக சந்தித்து அவர்களுக்கு உள்ள பிரச்சனைகளை இந்த துறை சார்ந்த (MSME & INDUSTRY) அமைச்சர்கள் பேசுகின்றனரா? அவர்கள் குறைகளை கேட்கின்றனர்? தேர்தல் நேரத்தை தவிர வேறு எப்போதாவது அவர்களை சந்தித்து பேசுகின்றனரா? என கேள்வி எழுப்பினார்.
தன்னுடைய வேண்டுகோளின் அடிப்படையில் மத்திய நிதியமைச்சர் கோவை உள்பட கொங்கு மண்டலத்தின் தொழில் துறை அமைப்புகள் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து அவர்கள் குறைகளை கேட்க வந்த நிகழ்வை சுட்டிக்காட்டி, தமிழக அமைச்சர்கள் செய்ய வேண்டிய அந்த வேலையை இங்குள்ள பா.ஜ.க. MLA ஒருவர் செய்கிறேன் என தெரிவித்தார்.
"நான் என் தொகுதிக்கு மட்டும் பார்த்து செய்யவில்லை, கோவை முழுவதும் நன்றாக இருக்க வேண்டும் என்று முயற்சி எடுத்து செய்து வருகிறேன்," என வானதி கூறினார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், திமுக அரசின் அபரிமிதமான மின் கட்டண உயர்வாலும், சொத்துவரி, பதிவு கட்டண உயர்வாலும் 30% குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூடக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதை மீண்டும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவையில் தொழில்கள் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்ற பிரச்சனைகளால் நசிந்து வருவதை இனியாவது தடுக்க தமிழக அரசு முயற்சிகள் எடுக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவையில் 30% MSME நிறுவனங்கள் மூடப்பட்டு வர இதுதான் காரணமா? என்ன சொன்னார் வானதி? முதலமைச்சர் தான் விரைவாக உதவ வேண்டும்!
- by David
- Sep 14,2024