கோவை மாநகர காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட 708 சிலைகள் இந்துஅமைப்புகள், பாரதிய ஜனதா கட்சி மற்றும் பொதுமக்கள் ஆகியோரால் நிறுவப்பட உள்ளது என காவல்துறை தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டது.

அண்மை தகவல்கள் படி, கோவை புறநகர ஜாவா நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 1532 விநாயகர் சிலைகள் நிறுவப்படும் என தெரியவந்துள்ளது.

கோவை மாநகரை பொருத்தமட்டில் முக்கிய சிலை ஊர்வலங்கள் செப்டம்பர் 9ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 11ஆம் தேதி ஆகிய இரு தினங்களில் நடைபெற உள்ளது. விநாயகர் சிலைகள் ஊர்வலம் மற்றும் கரைத்தல் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் காவல்துறை மற்றும் இதர அரசு துறைகளுடன் இணைந்து இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகளுடன் ஆகஸ்ட் 29ஆம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டது.

அதில் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு சிலை அமைத்தல், ஊர்வலம் மற்றும் கரைத்தலின் போது பின்பற்ற வேண்டியவை குறித்த அரசு மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல்கள் பற்றியும் அறிவுறுத்தல்கள் பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஊர்வலத்தின் போது பின்பற்ற வேண்டியவை குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலைய காவல்துறையினர் கூறியுள்ள வழி காட்டுதல்களை சிலை அமைப்பாளர்கள் தவறாது பின்பற்ற வேண்டும்.

சிலை ஊர்வலத்தின் போது அதன் துவங்கும் இடம் அல்லது கரைக்கும் இடம் என்று எந்த இடத்திலும் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை.

ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் பிற மத உணர்வுகளையோ அல்லது தனி நபர்களையோ விமர்சித்து புண்படுத்தக்கூடிய வார்த்தைகளை பேசவோ, பிரயோகிக்கவோ கூடாது. விதி மீறல்களை புரிவோர் ஊர்வலத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படுவதோடு அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படும்.

ஊர்வலத்தின் போது வாகனத்தில் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டால் அது பிற மதத்தினரையோ அல்லது தனிநபரையோ மத உணர்வுகளையோ புண்படுத்தும் வகையில் பிரச்சனைக்குரிய வாசகங்கள் அல்லது வார்த்தைகளை உள்ளடக்கியதாகவோ இருக்கக் கூடாது. விதி மீறல் இருப்பின் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Photo credits : Peri_Periasamy/X