கோவை சர்வதேச விமான நிலை விரிவாக்க பணிகள் விரைவில் துவங்கப்படும் என இன்று சட்டப்பேரவையில் அமைச்சர் TRB ராஜா தெரிவித்தார்.

இதுபற்றி அவர் சட்டப்பேரவையில் பேசுகையில், 100 ஆண்டுகளுக்கு முன்னரே மிக பெரிய தொழில்வளர்ச்சி கண்ட கோவை உள்ளிட்ட மேற்குமண்டலத்திற்கு மிக அத்தியாவசிய தேவையான, கோவை விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிக்கு, திமுக தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்று, சுமார் ரூ. 2,100 கோடி நிதி ஒதுக்கி, அந்த வேலைகள் முழுமையாக முடிக்கப்பட்டு, வெகு விரைவில், கோவை விமான நிலைய விரிவாக்க பணி துவங்கும் என்று கூறினார்.

நிலம் எவ்வளவு கையகப்படுத்தப்பட்டுள்ளது?

திமுக தலைமையிலான அரசு அமைந்ததும், கோவை சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய தேவைப்படும் நிலங்களை கையகப்படுத்தும் பணி வேகப்படுத்தப்பட்டது.  மொத்தம் 635.33 ஏக்கர் இந்த விரிவாக்கத்திற்கு தேவை.

விரிவாக்கத்திற்கான நிலத்தை மாவட்ட வருவாய் துறையை கையகப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து, மொத்தம் 635.33 ஏக்கர் நிலத்தில் சுமார் 558 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு பெருமுயற்சி எடுத்து கையகப்படுத்தியது. மீதம் இருந்த நிலங்களை முதலில் டிசம்பர் 2023க்குள் கையகப்படுத்தி முடிதிட்ட திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.

ஆனால் எதிர்பார்த்த அளவு நிலங்களை கையகபடுத்த முடியாமல் போனதால் 31 மார்ச் 2024ல் இந்த பணியை முடிக்க முடிவு செய்யப்பட்டது. அப்போதைய நிலவரப்படி 30 ஏக்கர் நிலம் தான் மீதம் உள்ளதாக சொல்லப்பட்டது. இதை கையகப்படுத்தி, இந்த பணியை நிறைவு செய்ய நடவடிக்கைகள் நடைபெற்று வந்தது.

இதற்கு நடுவே 2024 பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்டம் தமிழகத்தில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியானதிலிருந்து அதற்கு தேவையான பணிகளை செய்ய அதிகாரிகள் கவனம் செலுத்தி வந்ததால் மார்ச் மாதத்திலும் நிலம் கையகப்படுத்தும் பணி முழுவதுமாக நிறைவேறாமல் இருந்தது.

அப்போது வெறும் 14 ஏக்கர் நிலங்களையே கையகப்படுத்த வேண்டி இருந்ததால் இந்தப் பணியை மே 15 ஆம் தேதிக்குள் முடித்திட முயற்சிகள் நடைபெற்றன. மீதமுள்ள 14 ஏக்கர் நிலத்தில் 10 ஏக்கர் நிலம் ரிசர்வ் நிலம் என்பதால் அதை வருவாய் துறை கட்டணம் எதுவும் இன்றி விரைந்து கையகப்படுத்தி விடும். மீதம் வெறும் 4 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்த வேண்டிய நிலை இருக்கும் என்பதால் அதை கையகப்படுத்துவதற்கு கால தாமதம் ஏற்படாது என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர், நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் இறுதி நிலையை எட்டியுள்ளது எனவும் அண்மை தகவல்கள் படி இந்த பணிகள் இம்மாதம் (ஜூன்) இறுதியில் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாக நில கையகப்படுத்தும் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி படி, இந்த விரிவாக்கத்திற்கு தேவையான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அரசு தரப்பில் இருந்து அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.