கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் சாலைகள் சரியாக இல்லை என்ற வருத்தம் கோவை மக்களிடையே உண்டு.
நேற்று (4.11.2024) கூட கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவையில் சாலை சரியாக இல்லை ஆனால் அதுபற்றி அரசிடம் கேட்டால் ரூ.200 கோடி நிதி சாலைகளை அமைக்க கோவைக்கு வழங்கப்பட்டுள்ளது என கூறுகின்றனர். அவ்வாறு சாலைகள் அமைக்க வழங்கப்படும் நிதிக்கு அரசு கணக்கு கொடுக்க வேண்டும் என நேற்று அவர் பேசினார்.
இந்நிலையில் இன்று கோவைக்கு வந்த தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, கோவையில் கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற சாலைப்பணிகள் பற்றி முழு விளக்கமளித்தார்.
2022-23 ஆண்டு காலத்தில், மொத்தமாக எடுத்துக்கொள்ளப்பட்ட சாலை பணிகள் 1838. இதன் மொத்த நீளம் 328.77 கி.மீ. இதற்கான மதிப்பீட்டுத் தொகை ரூ.175.60 கோடி. இதில் ரூ.167 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2023-24 காலகட்டத்தில் ரூ. 138.51 கோடி மதிப்பீட்டில் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் ரூ.115.88 கோடி மதிப்பிலான பணிகள் முடிக்கப்பட்டிருக்கிறது. 2024-25 ஆண்டு காலத்தில் ரூ. 196.87 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட ரூ.45.97 கோடி மதிப்பிலான பணிகள் முடிக்கப்பட்டிருக்கிறது.
ஆக மொத்தம் இந்த 3ஆண்டுகளில் கோவையில் 5,215 பணிகள் எடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் மொத்த நீளம் 860.61 கி.மீ. இதன் மதிப்பீட்டுத் தொகை ரூ.415.06 கோடி. இதில் முடிக்கப்பட்ட பணிகள் எண்ணிக்கை 4998. அதன் மொத்த நீளம் 821 கிமீ. இதுவரை செலவாகி இருக்ககூடிய தொகை ரூ.329.14 கோடி.
தற்போது 217 சாலை பணிகள் கோவை மாநகரில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 38.32 கிலோமீட்டர் நீளத்திற்கு பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். கோவை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் 2024-25 ஆண்டுக்கான பணிகளில் 217 சாலைப்பணிகளில் பாதாள சாக்கடை மற்றும் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் முடிக்கப்படாததால் இந்த பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 217 சாலைப்பணிகளையும் 30.11.2024ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு, பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வளர்ச்சித்திட்டப்பணிகளும் விரைவாக மேற்கொள்ளப்படும் என்று கோவை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கோவை மாநகரில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை சாலை பணிகள் நடைபெற்றது? எத்தனை கோடிக்கு நடைபெற்றது? இதோ அமைச்சர் கொடுத்த அப்டேட்!
- by David
- Nov 05,2024