தீவிரமடைகிறது கனிமவள கொள்ளையை தடுக்கும் பணிகள் ... கோவையில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!
- by CC Web Desk
- Mar 15,2025
கோவை மதுக்கரை, கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக நடக்கும் கனிமவள கொள்ளைகளை தடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கோயம்புத்தூர் புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி புவியியலாளர் சந்தியா அந்தோணி மேரி மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் குமார் ஆகியோர் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கோவை மதுக்கரை அருகே பாலத்துறை - திருமலையம்பாளையம் சாலையில், இந்த குழுவினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு டிப்பர் லாரிகளை மடக்கி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் போது, அனுமதியின்றி சட்டவிரோதமாக 6 யூனிட் கனிமங்களை, ஒவ்வொரு டிப்பர் லாரிகளிலும் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. அந்த வாகனங்களை தணிக்கை செய்தபோது, அந்த வாகனத்துக்கான இணைய வழி இசைவானைச் சீட்டு மற்றும் நடை சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தன.
உடனடியாக இரண்டு வாகனங்களையும் தணிக்கை செய்த அதிகாரிகள், சட்ட விரோத கனிம கடத்தலில் ஈடுபட்ட கனரக வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதே போன்று கிணத்துக்கடவிலும் உரிய ஆவணங்கள் இன்றி, சட்ட விரோதமாக 11 டன் கனிம கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அடுத்தடுத்து அதிரடியாக கனிமம் கடத்தலில் ஈடுபட்ட கனரக வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், சட்ட விரோதமாக கனிம கடத்தலில் ஈடுபடும் கும்பல் மீது, நடவடிக்கை தீவிரமடையும் என அதிகாரிகள் மட்டத்தில் எச்சரிக்கை விடுத்தனர்.