கோவையில் உள்ள குளங்களை முறையாக பராமரியுங்க - அதிகாரிகளுக்கு மேயர் ஆர்டர்
- by David
- Mar 13,2025
கோயம்புத்தூர் மாநகராட்சியில் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் கிருஷ்ணம்பதி குளம், செல்வம்பதி குளம். குமாரசாமி குளம், செல்வசிந்தாமணி குளம், பெரியகுளம். வாலாங்குளம் மற்றும் குறிச்சிகுளம் ஆகிய ஏழு குளங்கள் மேம்படுத்தப்பட்டு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் உள்ள வாலாங்குளத்தில் கடந்த சில காலமாக ஆகாயத்தாமரைகள் படர்ந்து காணப்பட்டது .இது குளத்தில் 50% மேலே பரவி இருந்துள்ளது. இதனால் குளத்தில் நடைபெற்று வந்த படகு சவாரிகள் நிறுத்தப்பட்டது.
இந்த சம்பவம் செய்திகளில் பெரிதாக வெளிவந்தது. இதற்கு அடுத்து நேற்று வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி துவங்கி நடைபெற்றுவருகிறது.
ஆகயத்தாமரைகள் அதிகமிருப்பது நீரில் கழிவு நீர் உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறியாக இருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படும் நிலையில், ஆகாயத்தாமரைகளை அகற்றி குளத்தில் வாழும் மீன் உள்ளிட்ட பிற நீர்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என கோரிக்கைகள் உள்ளது.
இந்நிலையில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம் மற்றும் செல்வசிந்தாமணி குளம் ஆகிய குளங்களை கோவை மேயர் ரங்கநாயகி இன்று நேரில் ஆய்வு செய்தார்.
வாலாங்குளத்தில் ஆய்வு மேற்கொண்டு, குளத்தினை முறையாக பராமரித்திடவும் மற்றும் குளத்தில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை முழுமையாக அகற்றிட அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள குளங்களுக்கு வரும் பொதுமக்களை கண்காணிக்கும் வகையில் ரோந்து வாகனங்களை அமைத்திடவும் மற்றும் குளங்களில் பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளுமாறும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், உக்கடம் பெரியகுளத்தில் அமைந்துள்ள மிதிவண்டி பாதை (Cycle Track), பறவைகளை பார்வையிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர் மாடம் (Birds Watching Tower), கற்றல் மையம் (Learning Tower), அனுபவ மையம்(Experience Centre), மிதக்கும் சோலார் மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றையும் ஆய்வு மேற்கொண்டார்.