கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்தில் மேயர் ஆய்வு
- by David
- Mar 07,2025
கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மேயர் ரங்கநாயகி இன்று நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
வார்டு எண். 78க்குட்பட்ட கபூர்பாய் லே-அவுட் பகுதியில் 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் மாநகராட்சி இடத்தில் பூங்கா மற்றும் நூலகம் அமைப்பது குறித்தும், ஐ.யூ.டி.பி.காலனி பகுதியில் கூடுதலாக பொதுக்கழிப்பிடம் கட்டுவது தொடர்பாகவும் மேயர் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் பற்றி அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, வார்டு எண்.94க்குட்பட்ட சுந்தராபுரம் பிரதான சாலையில் கோடைகால வெப்பம் அதிகமாக உள்ளதால் மாநகராட்சி சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் தர்பூசணி பழங்களை வழங்கினார்.
மேலும், வார்டு எண்.91க்குட்பட்ட செங்குளம், குளத்துப்பாளையம் பகுதியில் ரூ.11.39 லட்சம் மதிப்பீட்டில் குளக்கரைகளின் RCC தாங்குச்சுவர் கட்டுமானப் பணியினையும், வார்டு எண்.97க்குட்பட்ட குறிச்சி குனியமுத்தூர், வி.எஸ்.என்.கார்டன் பகுதியில் 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ் விடுபட்ட இடங்களில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருவதையும் மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின் போது, தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.