வீடுகள் அல்லது குடியிருப்புகளுக்கு மிக நெருக்கமாக சினிமா தியேட்டர்கள் அதிக அளவில் இருக்காது என்பதை கவனித்துள்ளீர்களா? தியேட்டர்கள் இருக்கும் பகுதிகளில் அதிகமாக வணிக கட்டிடங்கள் தான் இருக்கும்.

விவசாய நிலத்திற்கு அருகே மருத்துவமனையோ அல்லது ஷாப்பிங் மாலோ அல்லது தொழிற்சாலையோ கட்டப்படுவது இல்லை என்பதை பார்த்துளீர்களா? அதே சமயம் ஊருக்கு சற்று வெளியில் நிறைய தொழிற்சாலைகள் இருக்கும். இது ஏன் ?

அதற்கு காரணம், ஒரு மாநகரின்/மாவட்டத்தின் நிலங்களை அரசாங்கம் வகை படுத்தி அதை ஒரு மாநகராட்சிக்கோ அல்லது மாவட்ட நிர்வாகத்திற்கோ வழங்கும். அந்தந்த இடங்களில் தான் வணிக நிறுவனங்கள் கட்டப்பட வேண்டும் என்று திட்டம் போட்டு தரப்பட்டிருக்கும். இதை ஒரு மாவட்டத்தின் 'மாஸ்டர் பிளான்' என்று சொல்லலாம்.

நிகழ்காலத்திலிருந்து அடுத்த 20 ஆண்டுகளில் கோவையில் நடைபெறக்கூடிய மக்கள் தொகை வளர்ச்சி, அதற்கு ஏற்ப கோவை மாவட்டத்தின் நிலப்பரப்பில் அமையக்கூடிய பெரும் நிறுவனங்களுக்கான, தொழில் பூங்கா, தொழிற்சாலைகளுக்கான நிலங்கள், தனியார் வீடுகள், குடியிருப்புகள் கட்டுவதற்கான நிலங்கள், பசுமை மற்றும் விவசாய தேவைக்கான நிலங்கள், வணிக கட்டிட நிலங்கள், மாநகருக்குள் பொது மக்கள் பயன்பாட்டிற்கான அம்சங்கள் இடம்பெற நிலங்கள்  என வகை பிரித்து காட்டக்கூடிய பெரும் வரைபடம் தான் 'மாஸ்டர் பிளான்'. 

ஒருவேளை இன்று  இவ்வாறு ஒரு நோக்கத்திற்காக வகைப்படுத்தப்பட்ட இடங்களில் அதை தவிர வேறு எந்த கட்டிடம் எழவேண்டும் என்றாலும் அதற்கு வெகு நாட்கள் ஆகும். நிறைய அரசு அலுவலகங்களில் கோப்புகளை சமர்ப்பித்து, நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். அதற்கு பல நாட்கள் ஆகிவிடும்.

எனவே புதுப்பிக்கப்பட்ட மாஸ்டர் பிளான் இருந்தால் வீடு கட்ட நினைப்பவர்கள், வணிக நிறுவனங்கள் கட்ட எண்ணுவோர், தொழிற்சாலைகள் கட்ட எண்ணுவோர் அனைவர்க்கும் எளிமையாக இருக்கும்.

கோவை மாவட்டத்தின் மாஸ்டர் பிளான் 1994ல் தான் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது. அதன் பிறகு பல ஆண்டுகள் கடந்து தற்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, அதன் வரைவு அறிக்கை வெளிவரவுள்ளது. இந்த நவம்பர் மாதமே இது வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிவரும் வரைவு அறிக்கையை வைத்து பொதுமக்கள் கருத்துகள் கேட்கப்படும். அதன் பின்னர் இறுதி வரைவு அறிக்கை வெளிவரும். இது புதிதாக வரக்கூடிய நிறுவனங்கள்/தொழிற்சாலைகள் , குடியிருப்புகள், பசுமை பூங்காக்கள் எளிதில் அமைய வசதியாக இருக்கும்.

இதை இன்று சொல்ல காரணம் என்னவென்றால் நவம்பர் 8 என்பது உலக நகர திட்டமிடல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஒரு நகரத்தை உருவாக்கும்போது எதிர்காலத்திற்கு ஏற்ப திட்டமிட வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.