கோவை மாநகரில் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சாலைகளில் போக்குவரத்து காவல்துறையினர் வாகனத் தணிக்கைகள் மேற்கொண்டு, போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது தக்க சட்டப்பிரிவுகளின் கீழ் அபராதம் விதித்து வருகின்றனர். அவ்வாறு விதிக்கப்படும் அபராதத் தொகையை ஆன்லைன் மூலமாக செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

 

இதில் குடிபோதையில் வாகனத்தை இயக்கியவர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி பதியப்படும் வழக்குகளில் அதிகப்படியான வழக்குகள் முடிக்கப்படாமல் நிலுவையில் இருந்துள்ளது. 

 

இந்நிலையில் இந்த வழக்குகளை விரைந்து முடிக்க பிரத்யேகமான நடமாடும் நீதிமன்றம் (Mobile Court) அமைக்கபட்டு, அந்த நீதிமன்றம் கடந்த 01.02.2025 ஆம் தேதி துவங்கப்பட்டது.

 

ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் வரை தொடர்ந்து கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் இயங்கி வந்த அந்த நடமாடும் நீதிமன்றத்தில் இதுவரை 1442 குடித்துவிட்டு வாகனம் இயக்கியதற்கான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. 

 

இதன் மூலம் அபராத தொகையாக Rs.1.44.20.000/- நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் வழக்கில் சம்மந்தப்பட்டு அபராத தொகையை செலுத்தாத நபர்களுக்கு நீதிமன்றத்தின் மூலம் அழைப்பாணை வழங்கப்பட்டு வருகிறது.

 

இந்த அழைப்பாணையை பெற்றும் ஆஜராகாமல் வழக்கை முடிக்காமல் இருக்கும் நபர்கள் மீது நீதிமன்றத்தின் மூலம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, 6 மாதம் சிறைதண்டனை வழங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

தகவல் : கோவை மாநகர காவல் துறை செய்தி குறிப்பு. படம் : விளக்கத்திற்காக மட்டும்.