மருதமலை முருகர் கோயிலில் கும்பாபிஷேகம்!
- by David
- Apr 04,2025
முருகப் பெருமானின் ஏழாம் படை வீடாக கருதப்படும் கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக திருவிழா இன்று காலை துவங்கி நடைபெற்றுவருகிறது.
இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.12 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. காலை 6 மணி முதல் 6:45 மணிக்குள் திருச்சுற்று தெய்வங்களுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 7:30 மணிக்கு யாக சாலையில் இருந்து திருக்குடங்கள் ஏந்தி கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து காலை 8:30 மணிக்கு மருதாச்சல மூர்த்தி விமானம், ஆதி மூலவர் விமானம், ராஜகோபுரம், கொடிமரம், பரிவார விமானங்கள் அனைத்துக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
காலை 9 மணிக்கு ஆதி மூலவர், விநாயகர், மருதாச்சல மூர்த்தி, பட்டீஸ்வரர், மரகதாம்பிகை, வீரபாகு, கரிவரதராஜ பெருமாள், சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு பேரொளி வழிபாடு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து மாலை 4:30 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது.
மாலை 5:30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, வள்ளி - தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி வள்ளி-தெய்வானையுடன் வீதி உலா வருகின்றனர்.