கோவையில் பேருந்து பயணிகளுக்கான நிழற்குடைகளில் அவசிய தகவல் இல்லை, விளம்பர தகவல்கள் உண்டு!
- by David
- Jan 15,2025
கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் உள்ள பேருந்துகள் நிறுத்துமிடங்களில் (பஸ் ஸ்டாப்) பயணிகள் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பொதுமக்கள் பேருந்து வரும் வரை நிழலில் அமர்ந்திட ஸ்டீல் சீட்டுகள் இணைக்கப்பட்டிருக்கும். இதனால் மக்களுக்கு, குறிப்பாக தாய்மார்கள், முதியோர்கள் மற்றும் வேலை முடித்து சோர்வுடன் வீடு திரும்பும் இளைஞர்களுக்கு நல்ல பலன் உண்டு.
ஆனால் கோவை மாநகரில் உள்ள பல பயணிகள் நிழற்குடைகளில் அவசியம் பொறுத்தப்பட்டிருக்கவேண்டிய டிஜிட்டல் பேருந்து தகவல் பலகைகள் இடம்பெறுவது இல்லை. அவ்வாறு இருந்தாலும் பெரும்பான்மையானவை சரியாக வேலை செய்வது இல்லை. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் - 2023ன் படி பேருந்து நிறுத்தங்களில் உள்ள நிழற்குடைகளில் 20% திற்கு குறைவில்லா இடம் பேருந்து வழித்தட எண்கள், அரசு திட்டங்கள் மற்றும் பொது விழிப்புணர்வு செய்திகளை காட்சிப்படுத்துவதற்கு ஒதுக்கப்பட வேண்டும்.
பல நிழற்குடைகளில் விளம்பரங்களுக்கான இடங்கள் கூட கட்சிதமாக உள்ளன ஆனால் பேருந்து எண்கள் மற்றும் அவை செல்லக்கூடிய தடம் குறித்த தகவல் இருப்பதில்லை.
இதுகுறித்து தி இந்து நாளிதழ் சென்ற ஆண்டு நவம்பர் மாதத்திலேயே மாநகராட்சியின் கவனம் விழும்படி கட்டுரை ஒன்றை வெளிகொண்டுவந்தது. அப்போது இது சம்மந்தமான ஒப்பந்ததாரர்கள் உடன் ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தி அனைத்தையும் விதிகளின்படி சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் நிலைமை இன்னும் அப்படியே தான் உள்ளது.
இந்த நிழற்குடையை கவனிங்க மக்களே!
கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகே நவம்பர் மாதத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டது.
அதில் மிக பெரும் டிஜிட்டல் தகவல் பலகை பொருத்தப்பட்டு, அங்கு வரக்கூடிய பேருந்துகள் பற்றி தெளிவாக தகவல் வழங்கப்படுகிறது. இது உள்ளூர் மக்களுக்கு மட்டும் இல்லாமல், மத்திய பேருந்து நிலையத்தில் வந்து இறங்கக்கூடிய வெளியூர் பயணிகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும். இப்படிப்பட்ட நிழற்குடையை கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் தனது உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் அமைத்துள்ளார்.
இதையும் கவனிங்க
இன்று கோவையில் உள்ள பல பயணிகள் நிழற்குடைகளுக்குள் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. கோவை மாநகரில் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஓட்டக்கூடாது என்ற உத்தரவு அமலில் இருக்க அது ஒரு பக்கம் ஜோராக நடக்கிறது.
மேம்பால தூண்களில் போஸ்டர் ஓட்டக்கூடாது என பலமுறை எச்சரித்தும் பழைய அரசியல் கட்சிகள் முதல் புதிதாக வந்துள்ள கட்சிகள் வரை அனைவரும் அவ்வாறே இன்றுவரை மேம்பால தூண்களில் போஸ்டர்களை ஓடிவருகின்றனர்.
ஒரு படி மேலே சென்று பயணிகள் நிழற்குடைகளுக்குள்ளும் ஒட்டுகின்றனர். மாநகராட்சி தான் இதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
Photos : David Karunakaran