கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மாநகராட்சியின் 24X7 இடைநில்லா குடிநீர் திட்டபணிகள் நடைபெற்றுவருகிறது. 2011க்கு முன்னதாக கோவை மாநகராட்சியில் இருந்த 60 வார்டு பகுதிகளில் இந்த திட்டத்திற்கான பணிகள் நடக்கிறது. இதை சூயஸ் எனும் தனியார் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ், கோவை மாநகரில் மொத்தம் 1,50,000 இடைநில்லா குடிநீர் இணைப்புகள் வழங்க வேண்டும். சமீபத்திய தகவல்கள் படி இதில் 1,15,800க்கும் அதிகமான இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிய வருகிறது. மேலும் அண்மை தகவல்படி இந்த 24x7 குடிநீர் திட்டம் 75%க்கும் மேல் நிறைவு பெற்றுள்ளது. அடுத்த 9 மாதத்திற்குள் இந்த திட்டப்பணிகள் நிறைவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் கோவை மாநகரின் சில பகுதிகளில் பிரதான குழாய்கள் அமைப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

காந்திபுரம், செம்மொழிப் பூங்கா வளாகம், வ.உ.சி.பூங்கா பகுதி, அவினாசி சாலை, ஆடிஸ் வீதி, லங்கா கார்னர் ஆகிய பகுதிகளில் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான பிரதான குடிநீர் குழாய் அமைப்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து ஹோப் காலேஜ், காமராஜர் சாலை பகுதியில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகள் குறித்தும் ஆணையர் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

2025 இறுதிக்குள் இந்த திட்டப்பணிகள் நிறைவடைந்து 2026ல் பயன்பாட்டுக்கு கொண்டுவந்துவிட்டால் அது பெரிய சாதனை தான் என்கின்றனர் (இந்த பணிக்காக தோண்டப்பட்டு சீரமைக்கப்படாத சாலையில் தினமும் சென்று வரும்) கோவை மக்கள்.