ரூ.1621 கோடி மதிப்பில் 10.1 கிலோமீட்டர் தொலைவுக்கு உப்பிலிபாளையம் சாலை சிக்னல் துவக்கத்தில் இருந்து கோல்ட்வின்ஸ் வரை கட்டப்பட்டு வரும் அவிநாசி சாலை மேம்பாலத்தின் பிரதான சாலை பகுதிகளை 2024 டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்க மாநில நெடுஞ்சாலை துறையின் தேசிய நெடுஞ்சாலை பிரிவு திட்டமிட்டுள்ளது.
2020 டிசம்பர் மாதம் துவங்கிய இந்த கட்டுமான பணிகள் ஆகஸ்ட் 2024ல் முடிக்கப்படவேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் நிறைவடைய கால தாமதம் ஆகிவருகிறது. 2025 மார்ச் மாதத்தில் முக்கியமான அனைத்து பணிகளும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவிநாசி மேம்பாலத்தில் 72% பணிகள் முடிவு பெற்றுள்ளதாக தமிழக அரசின் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் தரப்பில் சென்ற மாதம் தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி, மேம்பாலத்தின் மேற்பகுதியை மட்டும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து அதை திறக்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேம்பாலத்திற்கான 304 டெக் ஸ்லாப்களில் இன்னும் 50 மட்டுமே பொறுத்தவேண்டியுள்ளது.
மேம்பாலத்திற்கான தூண்கள் அமைப்பது ஒரே ஒரு இடத்தில தவிர மற்ற அணைத்து இடங்களிலும் நிறைவேறிவிட்டது. ஹோப்ஸ் பகுதியில் ரயில்வே பாலம் இருப்பதால் அங்கு தூண் அமைத்து பாலம் கட்டுவதற்கு பதிலாக இணைப்பு பாலம் (Composite Girder) அமைக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் நிறைவேற 3 மாதங்கள் ஆகும்.
அவிநாசி சாலை வழியே வரும் ஏர்போர்ட் சந்திப்பு பகுதி மற்றும் கிரிஷ்ணாம்மாள் கல்லூரி பகுதியில் லிப்ட் வசதியுடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அரசு உத்தரவும் விரைவில் கிடைக்கும் என நெடுஞ்சாலை துறை எதிர்பார்க்கிறது.