கோவை வெள்ளியங்கிரி மலைக் கோயிலில் ஜன.14-ம் தேதி வரை நந்த பூஜை மற்றும் கார்த்திகை மகா தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், வெள்ளியங்கிரி மலையில் உள்ள சுயம்புலிங்கசாமிகோவிலில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு ஆண்டுதோறும் கார்த்திகை 13ம் தேதி முதல் மார்கழி 30ம் தேதி வரை மகா தீபம் மற்றும் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி வனத்துறை அனுமதியுடன் நடைபெறுகிறது எனக்குறிப்பிட்டு, இந்த ஆண்டு அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு அக்டோபர் 23ம் தேதி மனு விண்ணப்பித்ததாக தெரிவித்து, அதுகுறித்து எந்த முடிவும் வராமல் இருந்ததால், தனது மனு மீது இந்த ஆண்டிற்கும், இனி வரும் ஆண்டுகளுக்கும் சேர்த்து அனுமதியை நீதிமன்றம் வழங்கவேண்டும் என கேட்டிருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் CV கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறை வெள்ளியங்கிரி மலைக்கோயிலில் மகா தீபம் ஏற்ற அனுமதி வழங்குவதாக தகவல் தெரிவித்தது. மலைக்கு செல்லும்போது ஆயுதங்கள் எதுவும் எடுத்து செல்லவோ, விலங்குகளை வேட்டையாடவோ, துன்புறுத்தவோ  கூடாது எனவும் வனத்துறை அதிகாரி தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டது. 

இதையடுத்து, 2025 ஜனவரி 14 வரை வெள்ளியங்கிரி மலை பகுதியில் நந்த பூஜை, கார்த்திகை மகா தீபம் ஏற்ற  காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை அனுமதி வழங்கப்படுவதாக நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.