கோவை மாநாகராட்சி கூட்டத்திலிருந்து 47-வது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரபாகரனை சஸ்பெண்ட் செய்து மேயர் ரங்கநாயகி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.

செப்டம்பர் 13ம் தேதி நடைபெற்ற கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் கடந்த 3 ஆண்டுகளாக திமுக அரசு ஸ்டிக்கர் அரசாக இருந்து வருகிறது. எந்த ஒரு திட்டத்தையும் புதிதாக வழங்காமல் அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என விமர்சித்தார்.

இதனால் 2 கட்சி கவுன்சிலர்கள் இடையே கடுமையான விவாதம் மாமன்றத்தில் ஏற்பட்டது. இதன் நடுவே பிரபாகரன் அடுத்த 3 மாமன்ற கூட்டத்தில் பங்கேற்க தடை விதித்து மேயர் ரங்கநாயகி உத்தரவிட்டிருந்தார்.

மேயர் தன்னை சஸ்பெண்ட் செய்த நிலையில், தான் எந்த தவறும் செய்யவில்லை என்று, பிரபாகரன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதுதொடர்பாக கோவை மேயர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 25ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மேயர் பிறப்பித்த உத்தரவை தடை செய்து நீதிமன்றம் ஆணையிட்டது. இதனால் பிரபாகரன் அடுத்த  மாமன்ற கூட்டத்தில் பங்கேற்க முடியும்.