மத்திய பிரதேசம் மாநிலத்தில் தொழில் துவங்க அழைப்புவிடுக்கும் வகையில் அம்மாநிலத்தின் தொழில்துறை சார்பில் 'மத்திய பிரதேசத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள்' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் கோவை, நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இன்று நடைபெற்றது.

இதில் மத்திய பிரதேசம் மாநிலத்தின் முதல்வர் மோகன் யாதவ் மற்றும் அரசு துறை செயலாளர்கள் கலந்து கொண்டு, தொழில்துறையினருக்கு வழங்கப்படும் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் மாணியங்கள் குறித்து எடுத்துரைத்ததோடு, மத்திய பிரதேசத்தில் தொழில் துவங்க வருமாறு அழைப்பும் விடுத்தனர்.

தொழில் துறையினருக்கான வாய்ப்புகள், அவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள், அரசு உதவிகள் உள்ளிட்ட தொழில் துறையினரின் மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்து இக்கருத்தரங்கில் விளக்கப்பட்டது.

இதில் கோவை, திருப்பூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஜவுளி மற்றும் பின்னலாடை தொழில், இன்ஜினியரிங், ஆட்டோமொபைல்ஸ், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், தகவல் தொழில்நுட்பத்துறை பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் மத்திய பிரதேச முதல்வர் மோகன்யாதவ் சிறப்புரையாற்றிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கோயம்புத்தூர் மிக முக்கிய பங்கு அளித்துள்ளதாகவும், அதேபோல் மத்திய பிரதேசத்தின் தொழில் வளர்ச்சிக்கு கோயம்புத்தூரை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் பங்கு வகிக்க வேண்டும் என கூறினார்.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து எந்த தொழில் நிறுவனங்களையும் எடுத்துச் செல்லவில்லை எனவும், தொழில் நிறுவனங்களின் விரிவாக்க திட்டத்திற்கு முதன்மை மாநிலமாக மத்திய பிரதேசம் விளங்க வேண்டும் என்ற அடிப்படையிலே இக்கருத்தரங்கங்கள் நடத்தப்படுவதாகவும், மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் தொழில் நிறுவனங்களை இணைக்கும் வகையில் தொழில் அலுவலகங்கள் திறக்கப்பட்டு தொழில் இணைப்பு உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.