'பம்ப் நகரம்' என்றழைக்கப்பட்ட கோவை இன்று மிகப்பெரும் சவால்களை சந்தித்து வருகிறது.
பம்ப்செட்டுகளுக்கு அதிக ஜி.எஸ்.டி., பம்ப் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் கிடைக்காமல் போதல், பிற மாநிலத்தில் உள்ள பம்ப்செட் உற்பத்தியாளர்களுக்கு அந்தந்த அரசுகள் வழங்கும் பல்வேறு ஊக்கத்தொகைகள் என இது போன்ற சில காரணங்களால் கோவையில் இயங்கும் பம்ப்செட் உற்பத்தி நிறுவனங்கள் பிற மாநில பம்ப்செட் உற்பத்தியாளர்களுடன் போட்டியிட முடியாமல் சிரமப்படுகின்றனர்.
சொல்லப்போனால் இதுபோன்ற காரணங்களால் கோவையில் இயங்கி வந்த சுமார் 30% பம்ப்செட் நிறுவனங்கள் செயல்படுவது கடந்த 2,3 ஆண்டுகளில் நிறுத்தப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
விரிவான தகவல் :-
இன்று குஜராத்தில் பம்ப்செட் உற்பத்திக்கான மூலப்பொருள் இங்கு கிடைப்பதை விட குறைந்த விலையில் கிடைக்கிறது, அத்துடன் தொழிற்சாலைகள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மானியம் மற்றும் மூலதனத்திற்கு மானியம் வழங்கப்படுகிறது. அதேபோல மத்திய பிரதேசத்திலும் பல ஊக்கத்தொகைகள் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.
ஜி.எஸ்.டி. அறிமுகம் ஆவதற்கு முன்னர் பம்ப்செட்களுக்கு 11% வரி இருந்தது. ஜி.எஸ்.டி. அறிமுகம் ஆனபோது பம்ப்செட்களுக்கு 12% வரி ஆக இருந்தது. தற்போது பம்ப்செட்களுக்கு 18% ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.
PM KUSUM எனும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள பல லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு பம்ப்செட் வழங்கப்பட்டுள்ளது, இன்னும் தொடர்ந்து வழங்கப்படவுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்றுள்ளது. இதனால் நாட்டில் பல விவசாயிகள் தாங்கள் வழக்கமாக வாங்கும் விவசாய பயன்பாட்டுக்கான பம்ப்செட்டுகளை வாங்காமல், இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் பம்ப்செட்டை வாங்க காத்துள்ளனர். ஆனால் இது சிக்கல் அல்ல.
இந்த திட்டத்தின் கீழ் பம்ப்செட்டுகளை வாங்க சில பெரும் நிறுவனங்களிடம் ஆர்டர் கொடுத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பம்ப்செட்டுகளை ஒரு உற்பத்தியாளர் அரசுக்கு வழங்கவேண்டும் என்றால் அதற்கு பல கடும் விதிமுறைகள் உள்ளது. இதனால் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் இந்த திட்டத்தின் கீழ் அரசுக்கு தங்களின் தயாரிப்புகளை வழங்க முடியாத சூழல் உள்ளது. இதுவே சிக்கலாக உள்ளது.
அரசு BIS தரச்சான்று பெற்றுள்ள அணைத்து உற்பத்தியாளர்களிடம் இருந்து PM KUSUM திட்டத்திற்கு பம்ப்செட் பெற முயற்சிக்க வேண்டும், குறைந்த வட்டி விகிதத்தில் தமிழகத்தில் உள்ள பம்ப்செட் உற்பத்தியாளர்கள் கடன் பெற வழி செய்ய வேண்டும், ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை குறைக்கவேண்டும் என கோரிக்கைகளை இத்துறை சார்ந்தவர்கள் முன்வைக்கின்றனர்.