கேரளா மாநிலம் பாலக்காட்டில் அமைந்துள்ள 50 அடி உயரம் கொண்ட சிறுவாணி அணை 1973ஆம் ஆண்டு கட்ட பணிகள் துவங்கி 1984ல் முடிக்கப்பட்டது. கோவையில் உள்ள 100 வார்டுகளில் 22 வார்டுகளுக்கும், இதை தவிர 28 கிராமங்களுக்கும் 7 டவுன் பஞ்சாயத்துகளுக்கும் தேவையான குடிநீர் இதன் மூலமாக தான் வழங்கப்படுகிறது.

இந்த அணையில் ஏற்படும் நீர் கசிவால் தினமும் 10 லட்சம் லிட்டர் நீர் அணையிலிருந்து வீணாவதாக தமிழக குடிநீர் வடிகால் வாரிய துறை அதிகாரிகள் கோவை மாநகராட்சிக்கு கடிதம் மூலம் அண்மையில் தெரிவித்தனர். 

அணையின் அனுமதிக்கப்பட்ட நீர்த்தேக்க அளவை (45 அடி) எட்டமுடியாமல் இருப்பதற்கு இப்படி நீர் கசிவு ஏற்படுவதும் ஒரு காரணம் என்பதை மறுக்கமுடியாது. இதை வேகமாக சரிசெய்ய வேண்டியது மிக அவசியமாகிறது.

இந்த நிலையில் அணையை ஆய்வு செய்து, அதில் என்னென்ன சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவேண்டும் என்பது பற்றி அறிய மத்திய நீர் மற்றும் மின்சார ஆராய்ச்சி நிலையத்தின் உதவியை கோவை மாநகராட்சி நாடியுள்ளது. 

அணையில் ஏற்படும் கசிவால் அணையின் உறுதி தன்மைக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. மாறாக இந்த பணிகள் எல்லாம் தண்ணீர் வீணாவதை தடுக்கவும், அணைக்கு வலுசேர்க்கவும் தான் செய்யப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.  

இந்நிலையில் மத்திய நீர் மற்றும் மின்சார ஆராய்ச்சி நிலையத்தின் அனுபவமிக்க பொறியாளர்கள் அடுத்த வாரம் சிறுவாணி அணையை ஆய்வு செய்ய நேரில் வருகிறார்கள். அவர்கள் ஆய்வு செய்துவிட்டு, அணையில் என்னென்ன பழுதுகள் உள்ளன, என்னென்ன சீரமைப்பு பணிகளை செய்யவேண்டும் என்பது பற்றிய ஒரு விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிப்பார்கள். அதில் பழுதுகளை சரி செய்வதற்கான தோராயமான மதிப்பீடும் அடங்கும்.

இதை வைத்து கோவை மாநகராட்சி, தமிழக அரசின் நகராட்சி நிர்வாக ஆணையரிடம் இப்பணிகளை முன்னெடுக்க தேவைப்படும் நிதியை பெற முயற்சி செய்யும். சிறுவாணி அணை குறித்த இந்த ஆய்வு மற்றும் அறிக்கையை கோவை மாநகராட்சிக்காக செய்ய மத்திய நீர் மற்றும் மின்சார ஆராய்ச்சி நிலையம் ரூ.17.5 லட்சம் கட்டணமாக பெற்றுள்ளது.  

கேரள அரசின் வியூகப்படி இந்த அணையில் உள்ள பழுதுகளை நீக்க ரூ.3 முதல் 4 கோடி வரை செலவாகலாம் என தெரியவருகிறது.