கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வரும் முதன்மை சார்பு நீதிமன்றம் மற்றும் நான்கு கூடுதல் சார்பு நீதிமன்றங்களில், கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. 

 

இந்த நிலையில்,தமிழ்நாட்டில் உள்ள சார்பு நீதிமன்றங்கள் வரலாற்றில், ஒரே ஆண்டில் அதிக வழக்குகளில் விசாரணை முடிவுற்று, 40க்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

இதுகுறித்து சார்பு நீதிமன்றங்களுக்கான அரசு தரப்பு கூடுதல் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், கோவையில் உள்ள சார்பு நீதிமன்றங்களில் 1987 - 2008 காலகட்டம் வரையிலான அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டிருக்கின்றன. 

 

இதில் குறிப்பாக கடந்த ஓராண்டில் மட்டும் 40க்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டு இருக்கின்றது. 

 

அதிமுக ஆட்சி காலத்தில் 35 ஆண்டுகளுக்கு முன் பழைய பேருந்துகள் ஸ்கிராபுக்கு ஏலம் விட்டதில் நடந்த மெகா மோசடி ஊழல் வழக்கில், குற்றவாளிக்கு 383 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 3 கோடியே 32 லட்சம் அபராதம் என்ற தீர்ப்பு தமிழ்நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. 

 

2003 ஆம் ஆண்டு கோவை உலுக்கிய தங்க கட்டி கொள்ளை வழக்கில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு கொள்ளை கும்பலுக்கு சிறை தண்டனை, கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் போலீசாரை கொலை செய்ய முயன்ற வழக்கில் ரவுடிகளுக்கு சிறை தண்டனை, குட்கா கடத்தல் வழிப்பறி மற்றும் கொலை முயற்சி, புறவழிச் சாலையில் பயணிக்கும் சரக்கு லாரிகளை குறிவைத்து நூதன வழிபறி கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்திருக்கின்றது. 

 

நீதிமன்ற வழக்காடு நகர்வில் அரசு தரப்பு சாட்சியங்களை காவல்துறை தரப்பில் முறையாக ஆஜர் படுத்தி, அரசு தரப்பில் நீதிமன்றத்தில் சரியான வாதத்தை முன் வைத்ததன் அடிப்படையில், சார்பு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவித்திருக்கின்றது.

 

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பரபரப்பான வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில், கடந்த ஒரே ஆண்டில் 40க்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்தது தமிழ்நாடு அளவில் இதுவே முதல் முறை. காவல்துறை மற்றும் நீதித்துறை ஒருங்கிணைந்து பணியாற்றிய தான் வாயிலாகவே இது நடந்திருக்கிறது என அவர் தெரிவித்திருக்கின்றார். 

 

சார்பு நீதிமன்றங்களில் அதிக வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதற்கு, அரசு தரப்பு கூடுதல் வழக்கறிஞராக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதித்த வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்திக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் தரப்பில் பாராட்டப்பட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்திருக்கின்றனர்.