கோவையில் காந்திபுரம் பகுதியில் அமைந்து வரும் செம்மொழி பூங்கா திட்டத்தின் கட்டுமான பணிகள் தற்போது வரை 35%க்கும் அதிகமாக நிறைவேறியுள்ளது. 

மத்திய சிறை மைதானத்தில் மாநகராட்சி சார்பில் 165 ஏக்கர் நிலத்தில் இந்த பூங்கா பணிகள் மிக வேகமாக நடைபெற்றுவருகிறது. 2 கட்டங்களாக நடைபெறும் இந்த திட்டப்பணியில் முதல் கட்டம் - 45 ஏக்கர், இரண்டாம் கட்டம் - 120 ஏக்கர் என பிரிக்கப்பட்டு முதல் கட்டத்தில் 25 ஏக்கருக்கு 23 வகை தனித்துவமான தோட்டங்கள் அமைகிறது. மீதம் உள்ள 20 ஏக்கர் நிலத்தில் 1000 சதுர அடியில் உலக தரம் கொண்ட பல்நோக்கு மாநாட்டு மையம், திறந்தவெளி அரங்கம், 300 கார்கள் நிறுத்தும் அளவிற்கான பார்க்கிங் வசதி, செயற்கை நீரூற்று என மற்றும் சில கட்டமைப்புகள் உருவாகின்றன.

45 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வரும் செம்மொழி பூங்காவின் முதல்கட்ட பணிகளை 2025 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதை குறித்த காலத்தில் முடித்திட வேண்டும் என்ற நோக்கில் பணிகள் துரிதமாக அதே சமயம் தரத்தின் மீது கவனத்தோடு நடைபெற்று வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நடைபெறும் பணிகள் தோட்ட பணி, கலையரங்க பணி என 2 ஆக பிரிக்கப்பட்டு நடைபெறுகிறது. இதை தனித்தனி குழுக்கள் கவனித்து வருகின்றன.

பல்நோக்கு மாநாட்டு மையம், திறந்தவெளி கலையரங்கம், சுற்று சுவர் கட்டுவது ஒரு பக்கம் நடைபெறுகிறது. மற்றோரும் பக்கம் 23 வகை தோட்டங்களுக்கான பணிகள், உணவகம், கழிவறைகள்,  போன்றவை நடைபெறுகிறது. இத்துடன் வாகன நிறுத்தம், சாலைகள் அமைப்பது, நடைபாதைகள், நுழைவாயில், டிக்கெட் கொடுக்கும் வளாகம், தோட்ட பணியாளர்கள் தங்குமிடம் அமைப்பது போன்ற பணிகள் உள்ளன.

தற்போது சுற்றுப்புற சுவர் கட்டும் பணிகள் 70% நிறைவடைந்து உள்ளது. அதே போல பல்நோக்கு மாநாட்டு மையம் கட்டும் பணிகள் 70% நிறைவடைந்து உள்ளது. 23 வகை தோட்டங்களை அமைக்க எல்லாம் தயாராக உள்ளது. பருவமழை துவங்கும்போது இந்த பணிகள் அதை ஒட்டி துவங்கும். மீதம் உள்ள பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று, அரசு குறித்துள்ள காலத்தில் நிறைவேற்றப்படும் என தகவல் கள் தெரிவிக்கின்றன.