கோவை ஆம்னி பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் தரமுயர்த்தல் பணிகள் இந்த ஆண்டு இறுதி வரை நடைபெறும். அடுத்த 2 மாதங்களுக்கு பணிகள் இருப்பதால் இந்த திட்டப்பணி முழுதுமாக முடிவடைய 2025 ஜனவரி ஆகிவிடும் என தகவல்கள் கூறுகின்றன.
ஜி.பி. சிக்னல் - டெக்ஸ்டூல் பாலம் வழியே அமைந்துள்ள இந்த பேருந்து நிலையத்தை தரமுயர்த்த 1.5 ஏக்கர் நிலத்தில் ரூ.2.90 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவை மாநகராட்சி - மத்திய மண்டலத்தில் வார்டு 48ல் ஜி.பி. சிக்னல் ஒட்டி வரும் மேம்பால பகுதி அருகே சுமார் 1.5 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. 2023 அக்டோபர் மாதம் இந்த பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது. அதற்கு அடுத்து பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முழுவீச்சில் துவங்கின.
தற்போது இங்கு பேருந்துகள் நிறுத்தப்படும் இடங்களில் மேற்கூரை பொருத்துவதற்கான அமைப்புகள் நிறுவப்பட்டு வருகின்றன. இந்த பணிகளுடன் சேர்த்து மேற்கூரை பொருத்தும் பணிகளும் அடுத்த 1 மாத காலத்தில் முடிவடைந்து விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
1.5 ஏக்கர் நிலத்தின் மையப்பகுதி உளப்பட 4 பகுதிகளில் கூரைகள் பொருத்துவதற்கான அமைப்புகள் நிலத்தில் நிறுவப்பட்டு வருகின்றன. இதில் மையப்பகுதியில் நிறுவுவது தான் சற்று சவாலாக உள்ளதாக தெரியவருகிறது. இந்த பணியை அடுத்து வளாகத்தில் சமமான தளம் அமைக்கும் பணிகள் நடைபெறும்.
வழக்கமாக தார் சாலைகள் அமைப்பதற்கு பதில் இந்த பேருந்து நிலைய வளாகத்தில் ஆர்.சி.சி. (RCC - Reinforced Cement Concrete) எனும் முறையில் அங்கு தளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறையில் தளம் அமைக்கும்போது அது மிகவும் உறுதியாக இருக்கும்.
வெறும் சிமெண்ட் காண்கிரீட் மட்டுமில்லாது அதற்கு நடுவே ஸ்டீல் பார்கள் வைத்து அதன் மேல் மற்றும் ஒரு சிமெண்ட் தொகுப்பு இருக்கும் என்பதால் தளம் மிக வலிமையாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தார் சாலைகளில் ஏற்படும் குண்டுகுழி இதில் ஏற்படாது. இந்த பணிகள் நிறைவேற 2 மாதங்கள் ஆகும்.
இதையடுத்து கழிவறைகள், கடைகள், மழைநீர் வடிகால், பச்சிளம்குழந்தைகளுக்கு தாய்மார்கள் பாலுட்டிட அறைகள் என பல வசதிகளும் இங்கு முறையாக கட்டிமுடித்து, இது மக்கள் பயன்பாட்டுக்கு வர 2025 ஜனவரிக்கு மேல் ஆக வாய்ப்புகள் அதிகம்.
கோவை ஆம்னி பேருந்து நிலையத்தில் தார் சாலைக்கு பதில் RCC சாலை அமைக்க திட்டம்! அடுத்த 2 மாதத்திற்கு பணிகள் உள்ளது
- by David
- Oct 09,2024