கோவை சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு கையகப்படுத்திய நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை இந்திய விமான நிலைய ஆணையம் விரிவாக்க பணிகளுக்காக பெற்றுக் கொண்டுள்ளதாக தகவல் தற்போது வெளியாகி விமான பயணிகள் மற்றும் கோவை தொழில்துறையினரிடம் மிகப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்க பணிகள் 2021க்கு பின்னர் வேகமெடுத்தது. இந்த விரிவாக்க பணிகளுக்காக தமிழக அரசு ரூ.2000 கோடிக்கும் அதிகமான தொகையை நில உரிமையாளர்களுக்கு இழப்பீடாக வழங்கி நிலங்களை கையகப்படுத்தி இருந்தது. 

 

ஆனால், அதற்கடுத்து தமிழக அரசு, தான் கையகப்படுத்திய நிலங்களை மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்க சில நிபந்தனைகளை முன்வைத்தது. அவை எதிர்பாராததாகவும், புதிதாக இருப்பதாக கருதிய மத்திய அரசு அந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை. 

 

இதனால் பல ஆண்டுகளுக்குப் பிறகு வேகம் எடுத்த விரிவாக்கம் சம்பந்தமான பணிகள் திடீரென அப்படியே நகராமல் நின்றது. நிபந்தனைகளை தளர்த்த மாநில அரசும் முன்வரவில்லை. இதனால் விரிவாக்க பணிகள் ஆரம்பமாகும் சூழல் தாமதமாகி கொண்டே சென்றது. 

 

கோவை சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கம் என்பது கோவைக்கு மட்டுமல்லாது கொங்கு மண்டலத்திற்கு வளர்ச்சியை தரக்கூடிய ஒன்றாக பார்க்கப்படும் நிலையில் விமான நிலைய விரிவாக்க பணிகளை விரைவில் துவக்க வேண்டும் என்கின்ற கோரிக்கை தொடர்ச்சியாக தொழில் துறையினரிடமிருந்தும் விமானப் பயணிகள் தரப்பிலிருந்தும் எழுந்து வந்தது. 

 

இப்படியிருக்க சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி தமிழக அரசு, எந்த வித நிபந்தனையும் இல்லாமல் நிலங்களை விரிவாக்க பணிகளுக்கு ஒப்படைக்க திட்டமிட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்தன. 

 

எனினும் அதை அடுத்து இந்த திட்டம் குறித்து சில மாதங்கள் மயான அமைதியே நிலவி வந்தது. இந்நிலையில், கோவையின் நீண்ட கால கோரிக்கைக்கு நம்பிக்கை தரும் வகையில் தற்போது நகர்வுகள் நடைபெறத் துவங்கி இருக்கின்றது. 

 

கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக தமிழக அரசு ஒப்படைத்த நிலங்களை விமான நிலைய ஆணையம் பெற்றுக் கொண்டுள்ளது. கடந்த செவ்வாய் என்று இந்த முன்னேற்றங்கள் நடைபெற்று இருப்பதாக தெரிய வருகிறது. இந்த பணிக்காக ஆணையம் எடுத்துக் கொண்டுள்ள 470.17 ஏக்கர் நிலத்தில் 449.59 ஏக்கர் பட்டா நிலமாகவும், மீதமுள்ள 20.58 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் ஆகும். 

 

தன்னிடம் வழங்கப்பட்ட நிலங்களை விமான நிலைய ஆணையம் அளவீடு செய்து வருகிறது. இதற்கு அடுத்ததாக ஆணையம் சார்பில் இந்த நிலங்களில் சுற்றுச்சுவர் கட்டப்படும். ஏற்கனவே 130+ ஏக்கர் பாதுகாப்பு நிலத்தில் விரிவாக்க பணிகள் நடைபெற அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.இந்தத் திட்டத்திற்கு இன்னும் மிகக் மிகக் குறைவான நிலங்களே கையகப்படுத்த வேண்டி உள்ளது. அந்தப் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.