தினசரி கோவை நோக்கி வெளியூர்களில்  இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பெருமளவில் 28 கிலோமீட்டர் நீளம் கொண்ட 'எல்-அண்ட்-டி பை பாஸ் சாலை' வழியாக தான் மாநகருக்குள் வருகின்றன. 

 

தற்போது இந்த சாலை ஒரு மாநில நெடுஞ்சாலை போல மாறிவருவதாக அங்கு வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். 

 

1998ல் இரண்டு வழி சாலையாக எல்-அண்ட்-டி பை பாஸ் சாலையை அமைத்தபோது இருந்த சூழல் இன்று பெருமளவில் மாறியுள்ளது. சீறிப்பாயும் கார்களுடன் கனரக வாகனங்கள், டிராவல்ஸ் பஸ்கள் என வேகமாக பறக்கும் வாகனங்களில் எண்ணிக்கை  இங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. 

 

ஆந்திரா, கர்நாடக-பெங்களூரு, ஈரோடு, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும்  வாகனங்கள் பல்லடம் பை பாஸ் வழியாக கோவை செல்வதை விட 'எல்-அண்ட்-டி பை பாஸ் சாலை' வழியாக தான் கோவை செல்கின்றன. 

 

இப்படி உள்ள இந்த பைபாஸ் சாலையை கடந்து தான் சுற்றியுள்ள பள்ளபாளையம்,பீடம்பள்ளி,நடுப்பாளையம், பட்டணம், கஞ்சி கோணம்பாளையம் உள்ளிட்ட 10 கிராமங்களில் வசிக்கும் 50,000 மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு கோவை மாநகரை அடைந்து வருகின்றனர்.

வெளியூரிலிருந்து வரும் வாகனங்களுக்கு இந்த வழியாக மக்கள் கடந்து செல்வார்கள் என்று பெரிதளவு தெரிய எச்சரிக்கை விளக்குகள் இங்கு இல்லை என்று அங்கு வசிக்கும் சிலர் தகவல் தெரிவிக்கின்றனர். 


மேலும் இந்த சாலையில் செல்லும்போதும் நடுப்புறம் டிவைடர்கள் இல்லாதது மேலும் பாதுகாப்பை குறைக்கும் படி இருப்பதாக கருத்து தெரிவிக்கின்றனர்.   

 

ஒரு வாரத்திற்கு குறைந்தது 2 முதல் 3 விபத்துகள் இந்த பைபாஸ் சாலையில் நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் உயிர்சேதங்களும் நிறைய இங்கு ஏற்பட்டுள்ளது. 

 

தினமும் இந்த வழியாக பள்ளிக்கு செல்வோர், வேலைக்கு செல்வோர் நூற்றுக்கணக்கானப்பேர் சாலையை கடப்பதால் மக்கள் சாலையை கடக்கும் இடங்களில் சிக்னல் மற்றும் அணைந்து எரியும் எச்சரிக்கை விளக்குகளை வைக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் வைக்கின்றனர். 

 

தற்போது சபரிமலை சீசன் என்பதால் வெளியூர் வாகனங்கள் வரத்து அதிகமாக உள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது இப்பகுதி மக்களின்  முக்கிய கோரிக்கையாக உள்ளது. 


PHOTO CREDITS : TOI