உங்கள் நிறுவனம் சார்ந்த பரிவர்த்தனைகளில் ரொக்கமாக உங்களால் ஒரு சிறு அளவிற்கு மேல் செய்ய முடியாது என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா?

எம்.எஸ்.எம்.இ. (MSME) என்று அழைக்கப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்துறையை சேர்ந்தவர்கள் ரொக்க பரிவர்த்தனை செய்ய வருமான வரித்துறை சில வரம்புகளை வைத்துள்ளது.

எவற்றுக்கெல்லாம் எத்தனை ரூபாய் ரொக்கமாக பரிவர்த்தனை செய்ய முடியும் என்பதைப் பற்றி சொல்கிறார் கோவையை சேர்ந்த பிரபல ஆடிட்டர் மற்றும் 'தி ஸ்டார்ட்அப்ஸ் அகாடமி' யின் நிறுவன தலைவர் ஜி.கார்த்திகேயன்.


இந்திய வருமான வரி சட்டத்தின் படி ரூ. 10,000 க்கு மேல் செய்யும் எந்த ஒரு செலவையும் ரொக்கமாக செய்யக்கூடாது. அதை காசோலையாகவோ அல்லது வங்கி வழியாக செய்யக்கூடிய இணைய பரிவர்த்தனை முறைகளான RTGS/NEFT மூலமாக தான் செய்ய வேண்டும். இதை மீறி ரொக்கமாக பரிவர்த்தனை செய்தால் அது 'செலவு' (expenses) என்ற கணக்கின் கீழ் தான் வரும் அதற்கு நீங்கள் வரி செலுத்த நேரிடும்.

ரூ.20,000 க்கு மேல் ஒருவரிடம் நீங்கள் பெற்ற கடனை திரும்ப செலுத்தும் போது அதை காசோலையாகவோ அல்லது வங்கி மூலம் நடைபெறும் பரிவர்த்தனை வழியாக தான் செலுத்த வேண்டும். மீறும் பட்சத்தில் அதற்கு அபராதம் கட்ட நேரிடும்.

அதேபோல் முன்பணமாக பெற்ற தொகையை திருப்பி செலுத்தும் போது ரூ. 20,000 வரைதான் ரொக்கமாக கொடுக்க வேண்டும். அதற்கு மேல் அனைத்தையுமே காசோலையாகவோ அல்லது வங்கிகள் அனுமதிக்கும் பரிவர்த்தனை வழிகள் மூலமாகதிரும்பச் செலுத்தலாம். இதை தவறும் பட்சத்தில் அபராதம் கட்ட நேரிடும்.

உங்கள் வியாபாரத்திற்காக வாங்கும் சொத்துக்கள் (அவை உபகாரணங்களாக இருக்கலாம், இயந்திரங்களாக இருக்கலாம், பர்னிச்சர்கள் ஆக இருக்கலாம்) எதை வாங்கினாலும் வெறும் ரூ. 10,000 வரைதான் ரொக்கமாக தர வேண்டும். அதற்கு மேல் சென்றால் வரி செலுத்த வேண்டியிருக்கும்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட அறக்கட்டளைகளுக்கு நன்கொடைகள் தரும் போதும் வெறும் ரூ. 2000 வரை தான் ரொக்கமாக தர வேண்டும். அதற்கு மேல் வங்கிகள் மூலம் நடைபெறும் பரிவர்தனை முறைகள் அல்லது காசோலைகள் மூலமாகத்தான் தரவேண்டும். மீறி ரொக்கமாக தந்தால் அது வருமான வரித்துறை பிரிவில் வழங்கும் 80 ஜி சலுகை கீழ் வராது.

இவற்றை நிறுவனத்தின் கணக்கு தணிக்கையாளர் (auditor) பார்த்துக்கொள்வார் என்று கருதாமல், தொழில் செய்யும் அனைவரும் அறிந்து செயல்படுவது பல நன்மைகளை நிறுவனத்திற்கு செய்யும். இதை தெரிந்துகொள்வது அவசியம். இதை பின்பற்றுவதால் தேவையில்லாத அபராதங்கள் கட்டவேண்டியிருக்காது, என்றார்.