கோவையின் குடிநீர் தேவைக்கு உறுதுணையாக இருக்கும் சிறுவாணி அணையில் மே மாதத்தில் 10 அடி மட்டுமே தான் தண்ணீர் இருந்தது.

கேரளாவில் உள்ள பாலக்காட்டில் அமைந்துள்ள 50 அடி கொள்ளளவு கொண்ட சிறுவாணி அணையில் பாதுகாப்பு காரணமாக 45 அடிவரை தான் தண்ணீரை தேக்கவேண்டும் என கேரளா அரசு கூறிவரும் நிலையில் 45 அடி வரை மட்டுமே நிரப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த பருவமழை காலம் பெரிதளவு கைகொடுக்காமல் போனதால் 2024 மே மாதத்தில் சிறுவாணி அணையில் 10 -12 அடிக்கு மட்டுமே தண்ணீர் இருந்தது. அதன் பின்னர் ஜூன் மாதத்தில் பெரிய முன்னேற்றம் இல்லாமல் இருந்த நிலையில் ஜூலை மாதத்தில் தென்-மேற்கு பருவமழை சிறுவாணி ஆணையின் நீர் மட்டத்தை வேகமாக உயர்த்தியது.

குறிப்பாக தற்போது ஜூலை மாதத்தில் அணையின் நீர் மட்டத்தில் நல்ல முன்னேற்றம் இருந்துவருகிறது. செவ்வாய் அன்று 35.35 அடியாக இருந்து அணையின் நீர்மட்டம் இன்று (19.7.24)ல் 42.02 அடியாக உள்ளது. இன்னும் 2.98 அடியாக உயர்ந்திருந்தால் 45 அடியை எட்டியிருக்கும். இந்த அளவிற்கு நீரை தேக்க அனுமதி இருக்கின்றது.

ஆனால், கேரள நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் சிறுவாணி அணையில் நிர்ணயிக்கப்பட்ட 45 அடி நீர்மட்டம் வருவதற்கு முன்னரே 42.02  அடியில் உள்ள நிலையில் 1000 கன அடி தண்ணீரை வெளியேற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கோவை மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகவே பார்க்கப்படுகிறது.