கோவை காரமடையில் உள்ள அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும்  மாசிமகத்தில் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த நிலையில் இந்த நிகழ்வு இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜைகளும், அலங்காரமும் செய்யப்பட்டன. இதற்கு பின்னர் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது துவங்கியது. 40 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தில் அர்ச்சகர்களால் சரியாக காலை 11 மணிக்கு கொடியேற்றி வைக்கப்பட்டது.

இதனையொட்டி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி அரங்கநாதர் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டமானது வரும் 12 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. அன்று காலை 5:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், தேருக்கு எழுந்தருளுகிறார். மாலை, 4:30 மணிக்கு தேர் வடம் பிடித்தலும், தேரோட்டமும் நடைபெற உள்ளது.