கோவையில் 2 நாட்களில் ஜல்லிக்கட்டு! ஏற்பாடுகள் தீவிரம் ...
- by David
- Apr 24,2025
வரும் ஏப்ரல் 27 (ஞாயிறு) தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவை செட்டிபாளையம் பகுதியில் மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடத்தின் முகப்பில், ஜல்லிக்கட்டுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு காளையை, வீரர் ஒருவர் அடக்குவது போன்ற சிலை அமைக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 800 க்கும் மேற்பட்ட காளைகள் களமிறக்கப்படுவதாகவும் காளைகளை அடக்க 500க்கும் மேற்பட்ட காளையர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்றும் கூறினார்.
ஒரே நேரத்தில் 10,000 பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் மாபெரும் கேலரி அமைக்கப்படுவதாகவும், 3000 வாகனங்கள் வந்தாலும் நிறுத்தக்கூடிய வகையில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
போட்டியில், யாரும் அடக்க முடியாத காளைக்கு தமிழக முதலமைச்சர் சார்பில் ஒரு கார் பரிசாக வழங்கப்படுவதாகவும் அதேபோல அடக்க முடியாத காளையை அடக்குகின்ற அந்த மாபெரும் வீரருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் ஒரு கார் பரிசாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதேபோல இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசாக சிறப்பு பரிசுகளும் பங்கேற்கும் 800 வீரர்களுக்கும், காளைகளுக்கும் பொறுப்பு அமைச்சர் சார்பில் பரிசுகள் வழங்கப்படும் என்றும் கூறியதுடன் போட்டியை கண்டுரசிக்க பல்லாயிரக்கணக்கானோர் வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டினர்.