பெரும் நகரங்களில் மட்டுமே குடியேற விரும்பிய  பெரிய ஐ.டி. நிறுவனங்கள் தற்போது தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களான கோவை, திருச்சி,  மதுரையிலும் தங்கள் அலுவலகங்களை அமைக்கத் தொடங்கி உள்ளன.  இதில் கோவையில் தான் அதிக ஐ.டி.  நிறுவனங்கள் வரத் தொடங்கி உள்ளன. 


ஏற்கனவே கோவையில் 100க்கும் மேற்பட்ட சிறிய ஐ.டி. நிறுவனங்களும், 20  பெரிய நிறுவனங்களும் செயல்பட்டு வரும் நிலையில் மிக விரைவில் 20க்கும் மேற்பட்ட புதிய பெரிய  ஐ.டி. நிறுவனங்கள் வர உள்ளது என்று தகவல்கள் கிடைத்துள்ளது. 

கூடு விட்டு கூடு பாயும் ஐ.டி. ஊழியர்கள்... காரணம் என்ன? 


ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதங்களில் சாப்ட்வேர் நிறுவனங்களில் சம்பள உயர்வு (இன்கிரிமெண்ட்) வழங்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த மாதம் சம்பள உயர்வு கிடைத்த பின்னர் ஒரு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள்  மற்றொரு நிறுவனத்திற்கு அதிக சம்பளம் கேட்டு விண்ணப்பிக்கிறார்கள்.


 ஏற்கனவே வாங்கிய சம்பளத்தை விட மற்றொரு நிறுவனத்தில் 30 முதல் 40 சதவீதம் அதிக சம்பளம் கேட்டு சேருபவர்கள் ஏராளமாக உள்ளனர். அதனால் தான்  சாப்ட்வேர் நிறுவனங்களில் அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரு கம்பெனியில் வேலை பார்ப்பதில்லை. 


அடுத்தடுத்து நிறுவனங்களுக்கு செல்லும்போது தானாகவே சம்பள உயர்வும் கிடைத்து விடுகிறது. அதனால் தான் 5 முதல்  10 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஒருவர் மாதம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுபவராக உள்ளார். எந்த  நிறுவனமும் பணியாளர்களை அவர்களாக வெளியே அனுப்புவதில்லை. அதிக சம்பளம் எதிர்பார்த்து தான் மற்ற  கம்பெனிகளுக்கு செல்லும் நிலை உள்ளது.


இத்தகைய சம்பள உயர்வு வேறு எந்த துறையிலும் இருக்காது. அதனால் தான் இளைஞர்கள் சாப்ட்வேர் துறையை  அதிகம் தேர்வு செய்கிறார்கள். படித்து முடித்தவுடன் வேலைக்காக காத்திருக்க தேவையில்லை. கூப்பிட்டு வேலை கொடுப்பதால் சாப்ட்வேர் துறை மற்ற துறைகளை விட இளைஞர்களை அதிக அளவில் ஈர்க்கிறது. 


இத்தகைய கூடு விட்டு  கூடு பாயும் நிலை சாப்ட்வேர் துறையில் தான் காண முடியும். மேலும்  தேவை அதிகமாக இருப்பதாலும் சாப்ட்வேர்  என்ஜினியரிங் படிப்பவர்களும் அதிகரித்து வருகிறார்கள்.